இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மத்தியில் வெளியாகவிருக்கும் அடுத்த பெரிய திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக முதல் முறையாக இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கும் இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. சமூக பின்னணியில் சுவாரஸ்யமான திரைக்கதையில் உருவான மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து வைகை புயல் வடிவேலு, ஃபகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாமன்னன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் மிகப்பெரிய பலமாக படத்திற்கு இசையமைக்கிறார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். இவர் இசையில் முன்னதாக வெளியான ராசாகண்ணு, ஜிகு ஜிகு ரயில் ஆகிய பாடல்கள் இணையத்தில் ட்ரென்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இறுதிகட்ட பணியை முடித்து இந்த ஜூன் மாதத்தில் வெளியாகவிருக்கும் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தை படக்குழு முன்னதாக திட்டமிட்டது. அதன்படி இன்று ஜூன் 1 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நேரலையில் பாடல்களை இசைக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் முன்னதாக வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்பை நாளுக்கு நாள் உயர்த்தி வரும் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பட நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பலர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். மேலும் விழாவை மேலும் சிறப்பிக்கும் விதத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.இந்த அறிவிப்பு குறித்தும் பிரம்மாண்ட மாமன்னன் இசை வெளியீட்டு விழா உருவான விதம் குறித்தும் சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் சமீப காலமாக திரைத்துறையில் பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். முன்னதாக உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருந்தது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் தற்போது மக்கள் பணியில் அமைச்சராக இருப்பதால் மாமன்னன் திரைப்படம் அவரது கடைசி படமாக இருக்கும் என்று கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் நிறுத்தப்பட்டது. இருந்தும் உலகநாயகன் கமல் ஹாசன் – உதயநிதி ஸ்டாலின் திரைப்பயணம் தற்போது வரை ஆரோக்கியமாக பல சாதனைகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. அதன்படி தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கும் கமல் ஹாசன் புதிய படத்தையும் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தையும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.