தளபதி விஜயின் 'வாரிசு' திரைப்பட டிக்கெட், ஐக்கிய ராஜ்ஜியம் எனப்படும் UK நாடுகளில் பெரும் அளவில் விற்றுத்தீர்ந்துள்ளதாக அந்நாடுகளில் விநியோகிக்கும் நிறுவனமான Ahimsa Entertainment ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து பொங்கல் விருந்தாக ஜனவரி 12ல் வெளியாகும் திரைப்படம் 'வாரிசு'. பேன் இந்தியா படமாக உருவாகும் இத்திரைப்படம் தெலுங்கில் 'வாரிசுடு' என்ற பெயரிலும், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது.
தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல். இதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் கார்த்திக் பழனி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திலிருந்து 'ரஞ்சிதமே', 'தீ தளபதி', 'Soul of Varisu' உள்ளிட்ட பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத் குமார், குஷ்பூ, ஷ்யாம், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இன்று மாலை வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
குடும்ப உறவுகளைப் பற்றிய உணர்வுப்பூர்வமான படமாக வாரிசு உருவாகியுள்ளதாக, இதில் விஜயின் சகோதரராக நடித்துள்ள தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால், வாரிசு படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தினை ஐக்கிய ராஜ்ஜியத்தில் வெளியிடும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான Ahimsa Entertainment நிறுவனம், வாரிசு படம் UK டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்துவருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், தமிழின் வாரிசு மற்றும் தெலுங்கின் வாரிசுடு படங்களுக்கான 12,500 டிக்கெட்டுகள் ஐக்கிய ராஜ்ஜியம் எனப்படும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் விற்றுத்தீர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகள் முதல் நான்கு நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 4 முக்கிய திரையரங்குகளில் (Cine world, Odeon Cinemas, Vue International, Showcase Cinemas) முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தளபதி விஜயின் இந்த வாரயிறுதி வசூலில் அதிகமானதாகப் பார்க்கப்படுகிறது.
UK டிக்கெட் விற்பனை குறித்த Ahimsa Entertainment நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பதிவு உங்கள் பார்வைக்கு.