தமிழ் சினிமாவில் அழுத்தமான செய்தியுடன் எதார்த்த திரைப்படங்களை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் கொடுத்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. அதன்படி தென்மேற்கு பருவ காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை மட்டுமல்லாமல் உலக விருது மேடைகளையும் அலங்கரித்தது. அதில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் முன்னதாக வெளியான மாமனிதன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் சர்வதேச மேடைகளில் இன்றும் பல விருதுகளை குவித்து வருகிறது. தற்போது சீனு ராமசாமி ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘இடி முழக்கம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதனிடையே கடந்த 2019 ல் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கண்ணே கலைமானே. விவசாய துறையில் பட்ட படிப்பை முடித்து இயற்கை விவசாயம் செய்து வரும் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் அதே ஊரில் வங்கி மேலாளாராக வரும் கதாநாயாகி தமன்னா இருவருக்குமிடையேயான எதார்த்த காதலை விவசாயம் மற்றும் அதை சுற்றி நிகழும் அரசியலுடன் பேசியிருக்கும் இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய காசி விஸ்வநாதன் படத்திற்கு படத்தொகுப்பு செய்திருப்பார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார். மேலும் படத்தில் தமன்னா, உதயநிதி ஸ்டாலின் உடன் வடிவுகரசி, வசுந்தரா, பூ ராம், சரவண சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
கண்ணே கலைமானே திரைப்படம் வசூல் அளவில் கைகொடுக்கவில்லை என்றாலும் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோரின் திரைப்பயணத்தில் வரவேற்பை பெற்ற படமாக இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்தோ பிரெஞ்ச் பன்னாட்டு திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் கிடைதுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதினை தமன்னாவும் சிறந்த குணசித்திர கதாபாத்திரத்திற்கு வடிவுகரசியும் பெற்றனர். மேலும் சிறந்த திரைப்பட தயாரிப்பாளர் விருதினை உதயநிதி ஸ்டாலின் வென்றுள்ளார். இதையடுத்து இந்த தகவல் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் படக்குழுவினர் மற்றும் விருது வென்ற தமன்னா, உதயநிதி ஸ்டாலின், வடிவுக்கரசி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமியை வாழ்த்தி வருகின்றனர்.