ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நாளை ஜூன் 1ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. முதல் முறை அறிவிப்பு வெளிவந்த சமயத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் தான் மாமன்னன். பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என தனக்கென தனி பாணியில் தரமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ் தனது அடுத்த மிகப்பெரிய பாதிப்பாக இருக்க வேண்டும் என்ற முனைப்போடு உதயநிதி ஸ்டாலின் அவர்களோடு கைகோர்த்த மாமன்னன் திரைப்படத்தில் கூடுதல் பலமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் கைகோர்த்தார்.
முன்னதாக தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராகவும் தற்போது பதவி வகிக்கிறார். நீண்ட நாட்களாகவே சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்திருந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தை தனது கடைசி திரைப்படம் என ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த வகையில் தனது கடைசி திரைப்படமாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் இந்த மாமன்னன் திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மிக அழுத்தமான முன்னணி கதாபாத்திரத்தில் வைகைப்புயல் வடிவேல் அவர்கள் நடித்திருக்கிறார். இதுவரை வடிவேலுவை இப்படி பார்த்ததே இல்லை என சொல்லும் அளவிற்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தின் ஒவ்வொரு புகைப்படங்களும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இவை அனைத்திற்கும் மேலாக இசைப்புயலின் இசையில் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் பாடிய மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடலாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ராசா கண்ணு பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களையும் உருக வைத்தது.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் வைகைப்புயல் வடிவேலு ஆகியோரோடு இணைந்து ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஜூன் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த மாமன்னன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நாளை ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அட்டகாசமான இசை கச்சேரியோடு மிகப்பிரமாண்டமாக மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வைகைப்புயல் வடிவேலு பாடிய ராசா கண்ணு பாடலும் அடுத்து இசைப்புயல் ஏ ஆர்.ரஹ்மான் பாடி நடனமாடி வெளிவந்த ஜிகு ஜிகு ரயில் பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் மற்ற பாடல்களுக்காகவும் மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லருக்காகவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.