இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் வழக்கமான சமூக நீதிப் பேசும் படமாக வெளிவந்து மக்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றிருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிக்காக வைகைப்புயல் வடிவேலு அவர்களை நேரில் சந்தித்த மாமன்னன் படக்குழுவினர் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் மாரி செல்வராஜ் தனக்கென தனி பாணியில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான தரமான சமூக நீதி படைப்புகளை வழங்கி வருபவர். அதனைத் தனது முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இருந்தே மிகச்சிறப்பாக கையாண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படமான கர்ணன் திரைப்படத்தில் பெரிய பாதிப்பையும் சமூகத்திற்கான விவாதங்களையும் ஏற்படுத்தினார். இந்த வரிசையில் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த மிகப்பெரிய பாதிப்பாக வெளிவந்திருக்கும் திரைப்படம் மாமன்னன்.
ஆரம்பம் முதலே மாமன்னன் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. முதலாவதாக தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் திகழும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்சமயம் தமிழ் நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பதால் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்து மாமன்னன் திரைப்படம் தான் தனது கடைசி படம் எனவும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அதற்கு அடுத்தபடியாக வைகைப்புயல் வடிவேலு அவர்கள் இதுவரை தான் ஏற்று நடிக்காத முழுக்க முழுக்க அழுத்தமான முன்னணி கதாபாத்திரத்தில் மாமன்னன் எனும் கதையின் நாயகனாக நடித்திருப்பது இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை கூட்டியது.
எனவே தொடர்ந்து மிரட்டலான வில்லனாக ஃபகத் ஃபாஸில், புரட்சிகரமான நாயகியாக கீர்த்தி சுரேஷ் என பெரும்படையோடு மாரி செல்வராஜ் இறங்கிய மாமன்னன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் கைக்கோர்த்தார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க தேனி ஈஸ்வர் அவர்களின் ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்திருக்கும் மாமன்னன் படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். வழக்கம்போல் அனைவரும் சமம் என்கிற முக்கிய சமூக நீதியை பேசும் வகையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளிவந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் இடையே ஏதோபித்த வரவேற்பை பெற்று தற்போது மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக இந்த வெற்றிக்கு காரணமான இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மினி கூப்பர் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது வெற்றிக்கு மிக முக்கிய பலமாக அமைந்த வைகைப்புயல் வடிவேலு அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் படக்குழுவினர், அவருக்கு பெரிய மாலை ஒன்றை அணிவித்து மரியாதை செலுத்தி தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “தன் எதார்த்த மற்றும் தேர்ந்த நடிப்பால் #மாமன்னன் திரைப்படத்தை மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய அண்ணன் வடிவேலு அவர்களை நேரில் சந்தித்து அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்.” என தெரிவித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பகிர்ந்த அந்த வீடியோ இதோ…