தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகியாக பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக திகழும் நடிகை திரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை நடிகை திரிஷாவுக்கு தெரிவித்துக் கொள்கிறது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களையும் திரிஷா கொள்ளையடித்துள்ளார். ஏற்கனவே பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்திலேயே வந்தியத் தேவனாக கார்த்தி பேசிய "உயிர் உங்களுடையது தேவி" என்ற வசனத்தை திரிஷா செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் தங்கள் மனதில் இருந்து அன்போடு சொல்கின்றனர். இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து அசத்தலான படைப்புகள் திரிஷா நடிப்பில் வெளிவர காத்திருக்கின்றன. அந்த பட்டியல் பின்வருமாறு:

லியோ

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வரும் லியோ திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக கில்லி(2004), திருப்பாச்சி (2005), ஆதி (2006) மற்றும் குருவி(2008) ஆகிய 4 படங்களுக்கு பிறகு தற்போது 5வது படமாக 15 ஆண்டுகள் கழித்து திரிஷா - விஜய் கூட்டணி லியோ படத்தில் இணைந்துள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டு ஆயுத பூஜை வெளியிடாக வருகிற அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகிறது.

ராம் - பார்ட் 1

அடுத்ததாக திரிஷா, மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகரான மோகன்லாலுடன் ராம் - பார்ட் 1 படத்தில் இணைந்துள்ளார். திரிஷ்யம் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் ராம் பார்ட் 1 படத்தில் நடிகை திரிஷா மருத்துவராக Dr.வினீதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சதுரங்க வேட்டை 2

சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமியுடன் இணைந்து நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். சதுரங்க வேட்டை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் H.வினோத் கதை திரைக்கதையில், மனோ பாலா அவர்கள் தயாரித்த சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தை சலீம் படத்தின் இயக்குனர் NV.நிர்மல் குமார் இயக்கினார். சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் சதுரங்க வேட்டை 2 படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

பிருந்தா - வெப் சீரிஸ்

இந்த வரிசையில் நடிகை திரிஷா நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய தெலுங்கு வெப் சீரிஸ் பிருந்தா. காவல்துறை அதிகாரியாக திரிஷா நடித்திருக்கும் இந்த பிருந்தா வெப்சீரிஸ் விரைவில் சோனி லைவ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருக்கும் இந்த வெப்சீரிஸும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி ரோட்

திரிஷா நடிப்பில் அதிரடி ஆக்சன் திரில்லர் திரைப்படமாக தற்போது தயாராகி வரும் திரைப்படம் தி ரோட். கடந்த 2022 ஆம் ஆண்டு பூஜையோடு தொடங்கப்பட்ட தி ரோட் திரைப்படத்தில் திரிஷாவுடன் இணைந்து சார்பட்டா பரம்பரை பட “டான்சிங் ரோஸ்” சபீர் மற்றும் நடிகர் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகி வரும் தி ரோட் படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிகிறது. திரிஷாவின் அதிரடி ஆக்ஷனில் வெளிவர இருக்கும் தி ரோட் திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்ஜனை

சதுரங்க வேட்டை 2 படத்தை தொடர்ந்து நீண்ட காலமாக த்ரிஷா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் கர்ஜனை. பக்கா ஆக்சன் திரில்லர் திரைப்படமாக த்ரிஷா நடித்துள்ள கர்ஜனை திரைப்படம் பாலிவுட்டில் அனுஷ்கா சர்மா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான NH10 படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வழக்கமான திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருக்கும் கர்ஜனை திரைப்படத்திற்காக நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். காத்திருக்கும் ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.