என்றென்றும் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனம் கவர்ந்த உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் ஜெயிலர். முதல் முறையாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகி பாபு, விநாயகன், ரெடன் கிங்ஸ்லி, ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி செராஃப், தமன்னா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். விக்னேஷ் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல்.K படத்தொகுப்பு செய்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
அனிருத் இசையில் வழக்கம்போல் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரிலீஸுக்கு முன்பே ட்ரெண்டிங் ஹிட்டடித்த நிலையில் தற்போது படமும் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பெரிய அளவில் பூர்த்தி செய்யாத நிலையில் ஜெயிலர் திரைப்படம் அவை அனைத்தையும் ஜெயிலர் பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதேபோல் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த பீஸ்ட் திரைப்படமும் சில எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த நிலையில் ஜெயிலர் படத்தின் இந்த வெற்றி இயக்குனர் நெல்சனுக்கு ஒரு நல்ல கம் பேக் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த தமிழ் சினிமாவின் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் ஜெயிலர் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மற்றும் வசூல் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில்,
“ஜெயிலர் திரைப்படத்தின் ரிப்போர்ட் எப்படி வந்திருக்கிறது?” எனக் கேட்டபோது, "ஒரு நல்ல படம் நல்ல கலெக்ஷன் பண்ணும்.. எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது." என்றார். பின்னர், "ரஜினி சார் அவர்களின் திரைப்பயணத்தில் ஜெயிலர் படம் முக்கிய வெற்றி படமாக பார்க்கப்படுகிறதே?” என கேட்டபோது, "ஆமாம்.. அண்ணாமலை, பாட்ஷா சிவாஜி, சந்திரமுகி மாதிரி இதுவும் அந்த இடத்தை பிடிக்கும்." என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசும்போது, “முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூல் இருக்கும் என சொன்னீர்கள் ஆனால் படம் பார்த்து வந்தவர்கள் பல பேர் கலவையான விமர்சனமே கொடுக்கிறார்கள், அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டபோது, “கலவையான விமர்சனங்கள் வந்து பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தான் சொல்வார்களே தவிர எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் பார்க்கிறோம் திரையரங்குகளில் ரிசர்வேஷனுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்று, அதை வைத்து பார்க்கும் போது கலவையான விமர்சனங்கள் என்ற பேச்சுக்கு இடம் கிடையாது அந்த அளவுக்கு டிமாண்டாக போய்க் கொண்டிருக்கிறது. ஒரு சில சின்ன சின்ன ஊர்களில் சுமாராக இருக்கலாம் ஆனால் பெரிய பெரிய நகரங்களில் அட்டகாசமாக போய்க்கொண்டிருக்கிறது" என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட திருப்பூர் சுப்பிரமணியன் அவர்களின் அந்த முழு பேட்டையை கீழே உள்ள லிங்கில் காணலாம்.