இந்தியாவின் தலைசிறந்த கலை இயக்குனர்களில் ஒருவராக திகழும் தோட்டா தரணி அவர்கள் தற்போது வெளிவந்துள்ள இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் தனது கலை நுணுக்கத்தால் செதுக்கியிருக்கிறார். ராஜ பார்வை, பல்லவி அணு பல்லவி, சாகர சங்கமம், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தளபதி, திருடா திருடா, ஜென்டில்மேன், காதலன், பாம்பே, இந்தியன், வாலி, முதல்வன், குஷி, பாபா, ஜெமினி, சந்திரமுகி, வரலாறு, சிவாஜி, தசாவதாரம், தாம் தூம், கந்தசாமி, பொன்னியின் செல்வன் 1 & 2 என இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் திரைப்படங்கள் அனைத்திலும் தனது கலை இயக்கத்தயும் குறிப்பிட வைத்தவர்.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் பிரத்யேக பேட்டி கொடுத்த கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் தனது திரைப்பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “தசாவதாரம் திரைப்படத்தில் ஒரு சிலை இருக்கிறது அதற்குப் பின்னால் ஒரு பெரிய ஆராய்ச்சியில் இருந்திருக்கும்?" என அது பற்றி கேட்டபோது, “அந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் இன்னொரு கலை இயக்குனர் செய்தது.. ஜூனியர் தான் நான் என்றால் மிகவும் பிடிக்கும் அவருக்கு... அந்த ஆர்வத்திலேயே அவர் இதை செய்தார். மற்ற கோவில் செட் அமைப்புகள் அனைத்திற்கும் நம்முடைய மேஸ்திரி குழுவினர்கள் தான் சென்றார்கள். அவர் பாம்பேயில் இருந்து வந்ததால் நம்முடைய ஆட்களை தான் அனுப்புவோம். இதில் என்னுடைய வேலை எங்கே வந்தது என்றால் கடைசியில் அந்த சிலை தண்ணீரில் அடித்து கொண்டு வெளியில் வரும் அல்லவா? அந்த ஒரு எஃபக்ட்டுக்காக தான் அந்த படத்தை ஒப்புக்கொண்டேன். தண்ணீரில் அடித்து வந்ததற்கு பிறகு அதன் மேலே அந்த முத்து சிப்பி எல்லாம் இருக்கும் வயதாகி இருக்கும்…” என தெரிவித்த தோட்டா தரணி அவர்களிடம், அதற்காக என்ன செய்தீர்கள்? என கேட்டபோது, “அது இன்னும் நன்றாக வந்திருக்கும்... நான் மிகவும் தயாராக இருந்தேன் அந்த குறிப்பிட்ட பகுதி அசந்து விடுகிற மாதிரி இருக்க வேண்டும் என்று... அதற்கு ஒரு சிறிய பொடி ஒன்று இருக்கிறது. அந்த பொடியை கொண்டு வருவதற்கு ஏமாற்றி விட்டார்கள். அப்போது அந்த பொடி கிடைக்கவில்லை என்று கோபத்தில் ஒரு போனை கூட உடைத்து விட்டேன். ஏனென்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பே சொன்னதை செய்யவே இல்லை. ஆனால் வேலையில் இது மாதிரி எல்லாம் இருக்கும் அதை எல்லாரிடமும் காட்டிக் கொள்ள முடியாது... பின்னர் அந்த பொடி இல்லாமல் வேறு வழியில் அந்த வேலையை செய்து முடித்தோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம், அந்த சிலை புதிதாக இருக்கும் போது அதற்காக தனியாக சில பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும், ஆனால் அத்தனை ஆண்டுகள் கடலுக்குள் இருந்து வெளியில் வரும்போது அதற்கென்று ஒரு வயதாகி இருக்கும் அதற்கு எப்படி பணியாற்றினீர்கள்? எனக் கேட்ட போது, “பழமையானது என பணியாற்றும் போது சரியாக இது தண்ணீரிலேயே ஊறி இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்பதை தவிர இதற்கு பெரிய REFERENCE எல்லாம் நாம் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் இதுவெல்லாம் உங்களுக்கு சொந்தமாக உள்ளிருந்து வரவேண்டும். நீங்கள் இதை கற்பனை செய்து பார்க்க வேண்டும்” என தோட்டா தரணி அவர்கள் பதில் அளித்துள்ளார். மேலும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட தோட்டா தரணி அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…