தமிழ் சினிமாவில் மண் சார்ந்த கதையினை கருவாக கொண்டு மிகப்பெரிய அளவில் கவனம் பெற்ற இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். அதன் படி அவரது முதல் படமான ‘மதயானை கூட்டம்’ திரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூதாய மக்களின் வாழ்கையை நேர்த்தியாக கையாண்டு அட்டகாசமான திரைப்படமாக கொடுத்து தமிழ் திரையுலகில் கவனம் பெற்றார். முதல் படத்திலே ஒரு சமூதாய மக்களை பற்றி பேசி அவரது திரைப்பயனத்தை விமர்சனங்களுடன் தொடங்கினார். அதன்பின் நீண்ட வருடங்கள் கழித்து ‘இராவண கோட்டம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். கண்ணன் ரவி குழுமம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிக்க அவருடன் கயல் ஆனந்தி. பிரபு, இளவரசு, சுஜாதா, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு வெற்றி வேல் ஒலிப்பதிவு செய்ய ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருக்கிறார்.
முன்னதாக இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வரவேற்கப் பட்டது. மேலும் இந்த படமும் குறிப்பிட்ட சமூக மக்களின் வாழ்கையை பற்றி பேசுகிறது என்ற விமர்சனமும் பெற்றது. இந்நிலையில் தடைகளை மீறி நேற்று மே 12 ம் தேதி இராவண கோட்டம் திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் இப்படத்தை படக்குழுவினருடன் பார்த்து முடித்தார்.
படத்தை பார்த்த பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். ”இராமநாதபுரம் மக்களின் வாழ்வியல், அரசியல், கார்பரேட் நடவடிக்கைகள் ஆகிய பல கருத்துகளை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு சமூகத்தினருக்கு இடையே இருக்கும் நட்புறவையும், அரசியல் கார்ப்ரேட் தலையீட்டுக்குப் பிறகு அவர்களுள் ஏற்படும் பகையையும், அதனால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளையும் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் மிக சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் என்றாலே அது தண்ணீர் இல்லாத மாவட்டம் என்பதை அனைவரும் அறிவோம். அரசு அதிகாரிகளை அச்சுறுத்துவதற்கும் பணியிடை மாற்றத்திற்கும் இராமநாதபுரத்தில் தூக்கி அடிப்போம் என்று அச்சுறுத்துவார்கள். அப்படி இராமநாதபுரம் தரிசு பூமியாக மாறியதற்கு என்ன காரணம். ஏன் அது கருவேல காடு நிறைந்த பகுதியாக இருக்கின்றது. அதனை எப்படி கார்பரேட் நிறுவனங்கள் அணுகுகின்றனர். அரசியல் தலைவர்களும் அதை எவ்வாறு பயன்படுத்த பார்க்கிறார்கள். என்று பல கோணத்தில் உண்மை நிலவரங்களை அடிப்படியாக கொண்டு இயக்குனர் விக்ரம் சுகுமாறன் மிக சிறப்பாக காட்சிபடுத்தி இருக்கிறார்.
சாதி தொடர்பான பிரச்சனைகளை மையப்படுத்தி படைக்கபடுகின்ற திரைப்படங்கள் ஏதேனும் ஒரு சாதி சார்பு நிலையை அடைந்து விடுவதை நாம் பார்க்கிறோம். குறிப்பிட்ட சாதியின் வரலாற்றை பேசுகிறோம் என்று ஒருசார்பு நிலையை அந்த திரைப்படம் சென்று விடுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இந்த படத்தில் இரண்டு சமூதாயத்தினருக்கிடையேயான பிரச்சனைகளை படமாக்கியிருக்கிறார். ஒருசார்பு இல்லாமல் மிக லாவகமாக உருவாக்கியுள்ளார். மதி, செங்குட்டுவன் என்கிற இரண்டு கதாபாத்திரங்களும் மிக சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது. இளையதலைமுறையினருக்கு பாடம் சொல்லுகிற, வகுப்பு எடுக்குற ஒரு படமாக ராவணக்கோட்டம் திரைப்படம் அமைந்து இருக்கிறது. முற்போக்கு சிந்தனை உள்ளவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்தத்திரைப்படம் அமைந்து இருக்கிறது. விக்ரம் சுகுமாறன் அவர்கள் ஒரு நல்ல திரைப்படத்தை முற்போக்கு சிந்தனையோடு என்கிற சமூக பொறுப்புணர்வோடு இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்.
படத்தில் குறிப்பிட்ட ஜாதியை சுட்டும் வகையில் எந்த காட்சிகளும் படத்தில் இருந்தது போல எனக்குத் தெரியவில்லை. காமராஜர் காலத்தில்தான் கருவேல மரம் விதைகள் வந்ததாக சொல்லப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை.. பஞ்சத்தை போக்க காமராஜார் அமெரிக்க போன்ற நாடுகளில் உணவு பொருட்களை வரவைத்தார். அதில் அமேரிக்கா நாட்டுக்காரன் கருவேலம் கலந்து விட்டார் என்ற ஆதாரமற்ற கதை இருக்கிறது. துபாய் கூட கருவேல மரங்கள் இருக்கின்றன..” என்றார் தொல் திருமாவளவன்.
இது தொடர்பாக படத்தின் நாயகன் சாந்தனு இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து அதனுடன் “ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக நீதி காவலர் ஐயா தொல் திருமா அவர்களின் வாழ்த்தை எங்களுக்கு கிடைத்த தேசிய விருதாகவே கருதுகிறோம்..” என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவரது பதிவு ரசிகர்களால் வைரலாகி வருகிறது.