இந்து பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு தீவிரவாத இயக்கத்தில் சேருவது போன்ற கதையை கொண்டு கடந்த மே 5 ம் தேதி இந்தியா முழுவதும் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் முன்னோட்டம் வெளியான தருணத்திலிருந்து இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு பல பகுதிகளில் எழுந்தது. உண்மைக்கு புறம்பாக ஆதரமற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாகியிருக்கும் கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய பலர் பல வழிகளில் நடவடிக்கை எடுத்தனர்.
மத நல்லிணக்கத்தை கெடுக்கும் இப்படம் வெளியானால் மிகப்பெரிய பிரச்சனை வரும் என்று தமிழ் நாடு, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் இப்படத்தை தடை செய்ய கோரி வழக்குகளும் தொடரப்பட்டது. பல தடைகளை தாண்டி தமிழ் நாட்டில் சில திரையரங்குகளில் மட்டுமே கேரளா ஸ்டோரி திரைப்படம் திட்டமிட்டபடி வெளியானது. எதிர்ப்புகள் அதிகம் இருப்பதால் சட்ட ஒழுங்கு நடைமுறைபடுத்த டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின் பேரில் திரையரங்குகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்தும் போராட்டக்காரர்களின் எதிர்ப்பு ஓயாமல் இருந்ததால் படத்தை ஒரே நாளில் தமிழ் நாட்டில் திரையிட தடை விதித்தது.
தமிழ் நாட்டை போல தென்னிந்தியாவில் பல இடங்களில் இப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்து வந்தது. இது ஒரு புறம் இருக்க வட இந்தியா மாநிலங்களில் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவு வரவேற்பை அளித்து வருகின்றனர். படத்திற்கு வரி விதிப்பை தளர்வு செய்தும் இப்படத்தை வரவேற்று வருகின்றனர். ஒரு வாரமாக படத்திற்கு கிடத்தி வரவேற்பையடுத்து இப்படத்தை மேலும் 37 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை உலகெங்கிலும் இந்திய மொழிகளில் கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படுகிறது.
இது தொடர்பாக படத்தின் நாயகி அடா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் “ தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்க்க போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை பார்த்து டிரெண்ட் செய்பவர்களுக்கும் என்னுடைய நடிப்பை ரசித்து பாராட்டியவர்களுக்கும் எனது நன்றி.. இந்த வார இறுதியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 37 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகிறது” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதையடுத்து இப்படத்தின் ரசிகர்கள் இந்த பதிவினை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.