வாரிசு படத்தில் தனது கதாபாத்திரம் எத்தகையது? மற்றும் படம் எந்த மாதிரியான கதையமைப்பை சார்ந்தது என்பது குறித்து தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மனம்திறந்துள்ளார்.
தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் 'வாரிசு'. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத் குமார், குஷ்பூ, ஷ்யாம், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்துடன் இந்த பொங்கலுக்கு போட்டிபோடும் 'வாரிசு' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழின் இரு உச்சநட்சத்திரங்களின் படம் நேருக்கு நேர் மோதுவதால் இவ்விருபடங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், 'வாரிசு' படத்தில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், படத்தில் தனது கதாபாத்திரத்தின் தன்மை மற்றும் படத்தின் கதையமைப்பு எதைச் சார்ந்தது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தெலுங்கு ஊடகங்களின் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
வாரிசு உடனான அவரது பயணம் மற்றும் படத்தின் கதை எதைச் சார்ந்தது என்ற கேள்விக்கு, "தமிழில் 'வாரிசு' எனக்கு முதல் படம் ஆகும். இப்படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இப்படத்தின் கதையை எனக்குக் கூறினார். இதில் நான் தளபதி விஜயின் சகோதரராக வருகிறேன். எனது கதாபாத்திரம் படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக அமைந்துள்ளது. வாரிசு படம் எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது" என்று கூறினார்.
அவரது கதாபாத்திரம் நேர்மறையானதா? அல்லது வில்லன் போன்ற கதாபாத்திரமா? என்று கேட்டதற்கு, "வாரிசு படத்தில் எனக்கும் விஜய்க்குமான உறவு, சாதாரண இரு சகோதர்களுக்கிடையே உள்ளது போல் மிக இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது. என் கதாபாத்திரம் படம் முழுவதும் வரும். பொதுவாக இயக்குநர் வம்ஷியின் படங்களில் மனித உணர்வுகள் மிக உன்னதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதிலும் அவ்வாறே அமைந்துள்ளது. மேலும் இதில் நான் நடித்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மற்ற படங்களைக் காட்டிலும் தளபதி விஜய் இதில் எவ்வாறு ஸ்பெஷல் என்ற கேள்விக்கு, "நான் நடிகர் விஜயை இதற்கு முன்னதாக சிலமுறை சந்தித்துள்ளேன். ஆயினும் அவருடன் சேர்ந்து பணிபுரிவது இதுவே முதல்முறை. விஜய் அதிகம் பேசவே மாட்டார். படப்பிடிப்பின் போது செல்போன் கூட கொண்டுவரமாட்டார். இயக்குநர் 'பேக் அப்' சொல்லும் வரை அவரது கதாபாத்திரத்தை ஈடுபாட்டுடன் செய்வார்" என்று பதிலளித்துள்ளார்.
இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி உடனான அவரது பயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "வம்சி தெளிவாக சிந்திக்கக்கூடிய ஒரு இயக்குநர். தனது படங்களில் ஒரு ஒழுங்குமுறையை அவர் எப்போதும் கடைபிடிப்பார். எந்த விஷயத்துடனும் சமரசம் செய்துகொள்ளாமல் தரமான படங்களைக் கொடுப்பத்தில்தான் அவரது கவனம் இருக்கும்" என்று பேசியுள்ளார்.