தளபதி விஜயின் திரை பயணத்திலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய லியோ திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருக்கிறார். இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் இணைந்த தளபதி விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு லியோ திரைப்படத்தின் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்தார். அடுத்ததாக முதல் முறை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின் வெளிவர இருக்கிறது.
இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மிக முக்கிய திரைப்படங்களில் ஒன்று தான் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க தொடங்கின. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தின் முதல் பாடல் ஆனா நான் ரெடி பாடல் ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஹிட் ஆனது.
தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கும் திரிஷா லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னதாக விக்ரம் படத்தில் முக்கிய சிறப்பு தோற்றத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் வந்தது போல லியோ திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ராம்சரண் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்து அதிரடி அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 50 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. பின்னர் சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தின் தலைகோணம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற லியோ திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் தனது உதவி இயக்குனர்களின் குழுவோடு படப்பிடிப்பு தளத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "6 மாதங்களில் 125 நாட்கள் கொண்ட லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த படத்தில் தங்களது ஆத்மார்த்மான உழைப்பை கொடுத்த மொத்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி... தனிப்பட்ட முறையிலும் என் இதயத்திற்கும் இந்த பயணம் மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. பெருமையாக இருக்கிறது BOYS!" என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் அந்த புகைப்படம் இதோ…