தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் தற்போது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் இணைந்துள்ள லியோ திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக உலகநாயகன் கமலஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றி. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு மேல் காஷ்மீரில் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்சமயம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் ஆகியோருடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கலை இயக்குனர் N.சதீஷ்குமாரின் கலை இயக்கத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

வருகிற ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளன்று லியோ திரைப்படத்தின் ஸ்பெஷல் அப்டேட் ஒன்று ரசிகர்களுக்காக காத்திருக்கிறது. முன்னதாக நடிகை திரிஷா தனது 40 வது பிறந்த நாளை இன்று மே 4ம் தேதி கொண்டாடுகிறார். இந்நிலையில் நடிகை திரிஷாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகை திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து, “அலெக்சா அர்ஜுனரு வில்லு பாட்டிலிருந்து இந்த பகுதியை பாடு, "அழகிய தாய் மொழி இவள்… இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்" என குறிப்பிட்டு, “எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சர்ப்ரைஸாகவும் இருக்கிறது லியோ திரைப்படம் தான் உங்களுக்கும் 67 வது திரைப்படம் என தெரிந்தபோது” என பதிவிட்டுள்ளனர். தளபதி விஜயின் 67 வது திரைப்படமாக உருவாகும் லியோ திரைப்படம் திரிஷாவின் திரைப்பயணத்திலும் 67 வது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். மேலும் திரிஷாவின் பிறந்தநாள் பரிசாக லியோ படப்பிடிப்பு தளத்திலிருந்து தளபதி விஜய் - திரிஷா இணைந்திருக்கும் புதிய புகைப்படத்தையும் லியோ படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர். ட்ரெண்டாகும் அந்த புகைப்படம் இதோ…