தன்னிகரற்ற நட்சத்திர நடிகராக அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறாத போதிலும் வசூல் ரீதியில் வெற்றி பெற்றது. அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கிறார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டுகள் இந்த டிசம்பர் மாதத்தில்  வர தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. முன்னதாக வாரிசு படத்தின் 2வது பாடலாக "தீ தளபதி" எனும் பாடல் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன்.TR பாடியிருப்பதாக தற்போது வாரிசு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…