ஒட்டுமொத்த தமிழ்நாடு விஜய் ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருந்தால் லியோ திரைப்படத்திற்கான 4AM சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மாஸ்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக தளபதி விஜய் உடன் இணைந்திருக்கும் ஆரம்பம் முதலில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான அதிரடி ஆக்சன் திரைப்படமாக லியோ திரைப்படம் தயாராகி இன்னும் ஒரு வாரத்தில் ரசிகர்களுக்கு பக்கா விருந்தாக வெளிவர காத்திருக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் இணைந்துள்ள நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்த லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லியோ தாஸ் என்ற கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்க ஆண்டனி தாஸ் மற்றும் ஹெரால்ட் தாஸ் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் இருவரும் நடித்திருக்கின்றனர். இது தவிர சமீபத்தில் வந்த ட்ரெய்லரில் தளபதி விஜயின் கதாபாத்திரத்தின் பெயர் "பார்த்தி" என்றும் குறிப்பிடப்படுவதால் ரசிகர்களிடையே சுவாரஸ்யம் அதிகரித்திருக்கிறது.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டன்ட் இயக்கத்தில் பக்கா ஆக்சன் படமாக வரும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்கம் செய்திருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் மேயாத மான், ஆடை, குளுகுளு படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தி இருவரும் திரைக்கதை வசனங்களில் பணியாற்றியுள்ளனர். வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மிகப்பிரம்மாண்டமாக லியோ திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் மும்மரமாக பணியாற்றி வருகின்றனர். லியோ திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
முன்னதாக லியோ திரைப்படத்தை உலக அளவில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் திரையரங்குகள் வரை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக அறிவித்த படக்குழுவினர் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 4AM சிறப்பு காட்சிகளுக்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதாகவும் விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது லியோ திரைப்படத்திற்கான 4AM சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஒரு நாளுக்கு 5 காட்சிகள் வீதம் சிறப்பு காட்சிகளோடு லியோ திரைப்படத்தை திரையிட அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிவிப்பு இதோ…