தமிழ்நாட்டில் நடந்த முடிந்த 10 - 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு தளபதி ஊக்கத்தொகை வழங்கும் இடம் மற்றும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தனது திரைப்பயணத்தில் 67வது திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ திரைப்படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த 2023 ஆம் ஆண்டு ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தனது ரசிகர் மன்றங்களை வெறும் நற்பணி மன்றங்களாக மட்டுமல்லாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் தளபதி விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இலவசமாக உணவளித்து வந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், சமீபத்தில் உலக பட்டினி தனமான ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இலவசமாக உணவு அளித்து மக்களின் பசியை போக்கினர். முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தளபதி விஜய் குருதியகம் என்ற பெயரில் ரத்த தானத்தை முன்னெடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டு வந்த செயலியும் பொதுமக்கள் இடையே மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றதோடு பல்வேறு பகுதிகளில் ரத்த தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
தொடர்ந்து இதுபோன்று பலவிதமான நலத்திட்டங்களை செய்ய திட்டமிட்டு இருக்கும் தளபதி விஜய், அந்த வரிசையில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டிருப்பதாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற ஜூன் 17ஆம் தேதி சனிக்கிழமை அன்று சென்னையில் நீலாங்கரையில் அமைந்திருக்கும் ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் முன்னிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு தளபதி விஜய் நேரில் ஊக்கத்தொகை வழங்க இருக்கிறார். இது குறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
“ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவருக்கு ஏழு பிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது!
"தளபதி விஜய்" அவர்களின் சொல்லுக்கிணங்க, வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று "அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த "பத்து மற்றும் பணிரெண்டாம்" வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு "தளபதி விஜய்" அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்.”
என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தினரின் அந்த அறிக்கை இதோ…