மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அக்டோபர் 5ம் தேதி தளபதி விஜயின் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளிவந்தது. எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருந்த போதிலும் எதிர்பார்ப்புகளை தாண்டிய பல்வேறு விஷயங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்விகளையும் சுவாரசியங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படம் குறித்து ஏற்கனவே பல்வேறு இடங்களில் பேசிய போது மாஸ்டர் படம் மாதிரி இந்த படம் 50% தளபதி படம் 50% லோகேஷ் படம் என்று இல்லாமல் முழுக்க முழுக்க 100% லோகேஷ் படம் என தெரிவித்தது போலவே இந்த ட்ரெய்லர் வழக்கமான தளபதி விஜயின் விஷயங்களில் இருந்து விலகியே நகர்ந்து செல்கிறது. குறிப்பாக எந்த விதமான பஞ்ச் வசனங்களும் தளபதி விஜய் பேசும் வகையில் இடம் பெறவில்லை.
இது ஒரு புறம் இருக்க நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது LCUவில் லியோ படம் இருக்கிறதா இல்லையா… இந்த கதையில் இருக்கும் லியோ தாஸ், ஹெரால்டு தாஸ், ஆண்டனி தாஸ் என்ற "தாஸ் & கோ"வை சுற்றி நடக்கும் கதை களம் லியோ படத்தை LCU வில் இணைக்குமா என்ற சுவாரசியமான கேள்விகளும் கிளம்பி இருக்கின்றன. இந்த எல்லா கேள்விகளுக்கும் மேல் இருக்கும் மிகப்பெரிய கேள்வி படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறாரா? என்பதுதான். ஆரம்பம் முதலே லியோ என தளபதி விஜய் கதாபாத்திரம் (லியோ தாஸ்) இருந்த நிலையில் ட்ரெய்லரில் ஓரிடத்தில் நடிகை திரிஷா, “இனிமேல் நம்ம லைஃப் இப்படி தான் இருக்க போகுதா ‘பார்த்தி’ " என சொன்னதால் தளபதி விஜயின் முக்கிய கதாபாத்திரம் பார்த்தி அல்லது பார்த்திபன் என்ற கதாபாத்திரமாக இருக்கும் என தெரிகிறது. மற்றொரு இடத்தில் தளபதி விஜய் ஒரு வசனம் பேசும்போது, "எவனோ ஒருவன் பார்க்க என்னை போலவே இருக்கிறான்" என்ற வசனமும் ட்ரெய்லரின் இறுதியில், "இதுக்கு மேல உண்மை தெரியனும்னா லியோவே நேர்ல வந்து சொன்னாதான்" என்ற வசனமும் அதன் பிறகு தளபதி விஜய் சிகரெட் பிடித்தபடி வரும் லியோ கதாபாத்திரத்தில் என்ட்ரியும் ஒருவேளை இது இரட்டை வேடமாக இருக்குமோ என்ற கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
ஏற்கனவே LCU உட்பட பல்வேறு விதமான கேள்விகளோடும் எதிர்பார்ப்புகளோடும் ட்ரெய்லருக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்னும் பல சுவாரசியங்களை ட்ரெய்லர் கிளப்பி இருக்கிறது. இந்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் தெரிய அக்டோபர் 19 வரை காத்திருக்க வேண்டும். கழுதைப்புலி உடனான மிரட்டலான ஒரு ஆக்சன் காட்சி தியேட்டரில் மிகப்பெரிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கப் போகிறது என சொல்லலாம். திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என எல்லோரும் அவரது கதாபாத்திரத்தில் தனித்து தெரிவதால் படத்திலும் அந்த கதாபாத்திரத்திற்கான அழுத்தம் படத்திலும் அதே அளவிற்கு அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக யாரும் எதிர்பாராத வகையில் சாண்டி மாஸ்டர் நடித்திருக்கும் வித்தியாசமான ஒரு பயமுறுத்தும் கதாபாத்திரம் ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே நம் புருவத்தை உயர்த்துகிறது. வருகிற ஆயுத பூஜை வெளியீடாக அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த லியோ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் பக்கா அதிரடி ஆக்சன் மற்றும் பல சுவாரசியங்கள் நிறைந்த விருந்து கொடுக்க இருக்கிறார் என்பது மட்டும் உறுதி என ட்ரெய்லரில் தெளிவாக தெரிகிறது.