விஜய் நடிப்பில் இந்த ஆண்டு மிகபெரிய வெற்றி படமாக ‘வாரிசு’ திரைப்படம் திரைக்கு வந்தது. வெளியான சிறிது காலத்திலே மிகபெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் இன்னும் திரையில் ஓடிக் கொண்டிருக்க விஜய் தனது அடுத்த படமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தொடங்கி விட்டார், ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க ‘பீஸ்ட்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மற்றும் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யவுள்ளார்.
'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி ரசிகர்களிடையே மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. தற்போது இந்திய சினிமாவே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை வைத்துள்ள திரைப்படமாக தளபதி 67 உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், நடிகை பிரியா ஆனந்த், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் மற்றும் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் நடிகை திரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கின்றார்.
தளபதி 67 படம் குறித்து தொடர் அப்டேட்டுகளை குவித்து வரும் படக்குழு தற்போது படத்திற்கான தொலைகாட்சி உரிமம் குறித்து தகவலை வெளியிட்டு உள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 67 திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பிரபல சன் தொலைகாட்சி கைப்பற்றியுள்ளது. பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான காவலன்,தலைவா, ஜில்லா, புலி, தெறி,பைரவா, சர்க்கார், பிகில் மாஸ்டர், பீஸ்ட் போன்ற பல படங்களின் உரிமையை சன் தொலைக்காட்சி தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.முன்னதாக படத்தின் பாடல் மற்றும் இசை உரிமத்தை சோனி மியூசிக் சவுத் கைப்பற்றியது என அறிவிப்பு வெளியானது குறிபிடத்தக்கது. மேலும் வரும் நாட்களில் தளபதி 67 படத்தின் இணைய உரிமம் மற்றும் பல அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.