மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். இதனை அடுத்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தில் இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக ஒரு நாள் கூத்து படத்தின் அடியே அழகே பாடல் வைரல் ஹிட் ஆனது. தொடர்ந்து வரிசையாக சமுத்திரக்கனியின் தொண்டன், விஜய் சேதுபதி - கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், SJ.சூர்யாவின் மான்ஸ்டர், விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு, நெட்ப்ளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் மற்றும் நவரசா ஆந்தாலாஜி வெப்சீரிஸ்களுக்கும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டின்(2021) இறுதியில் பாலிவுட்டில் வெளியான மீனாட்சி சுந்தரேஸ்வர் படத்திற்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இந்த ஆண்டில்(2022) நடிகர் பிரபாஸ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ராதேஷ்யாம் படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக மலையாளத்தில் ஃபகத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன் விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் கட்டா குஸ்தி படத்திற்கும் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் திருமணம் இன்று அக்டோபர் 5ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இத்திருமணத்தில் திரை உலகைச் சார்ந்த பிரபலங்களும் பாடகர்களும் இசையமைப்பாளர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் திருமணத்திற்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.