தமிழ் சினிமா பல்வேறு கலைத் திறமைகளை கண்டெடுத்த காவிய தாய். சினிமாவையே முழுநேர பணியாக நம்பி இருக்கும் மனிதர்களை தான் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் பல்வேறு விலங்குகளும் தமிழ் சினிமாவின் தரம் உயர காரணமாக இருந்திருக்கிறது. சினிமா எனும் நூலகத்தில் பொறுத்த வரை நகைச்சுவை படங்கள், திகில் படங்கள், காதல் படங்கள், சைன்ஸ் ஃபிக்ஷன் படங்கள் போன்ற புத்தகங்கள் இருந்தாலும்... விலங்குகள் வைத்து படங்கள் என்பது சற்று வித்தியாசமான ஒன்று.
ஒரு சீசனில் தேவர் ஃபிலிம்ஸ், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே மிருகங்களை வைத்து திரைப்படங்களை உருவாக்கின. பீட்டா, ப்ளூ கிராஸ் போன்ற விலங்குகள் நலவாரியங்கள் தோன்றி படக்குழுவுக்கு வேலை பளு வைத்ததால் இந்த ஜானரின் கதவுகள் மூடப்பட்டுள்ளது. நல்ல நேரம், அன்னை ஓர் ஆலயம், ஆட்டுக்கார அலமேலு, ராம் லக்ஷ்மன் போன்ற படங்கள் வெற்றி கொடி கட்டியது இந்த சென்டிமென்ட்டால் மட்டுமே.
விலங்குகள் என்றுமே மனிதனின் நண்பன். நாம் வணங்கும் கடவுள்களிலே விலங்கு சென்டிமென்ட் உள்ளது. இதனால் என்னமோ விலங்குகள் கொண்டு எடுக்கப்படும் கதைகள் வெற்றியே பெறுகிறது. ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தாலும், சலுப்பு தெரியாமல் கதையை நகர்த்த உதவுகிறது. ஹீரோக்களை பார்க்கா விட்டாலும் விலங்குகளை பார்க்கிறார்களே நம் திரைப் பிரியர்கள்.
இந்த காலத்தில் விலங்குகள் எப்படி விஸ்வாசம் காட்டும் ? என்று லாஜிக் பார்க்கும் நாம் தான், ஜுராசிக் பார்க் படத்தில் வரும் டைனோசரை ரசிக்கிறோம். எம்.ஜி.ஆர் முதல் சிவகார்த்தியேகன் வரை பலர் விலங்குகளை கொண்ட படங்களில் நடித்துள்ளனர். சாண்டோ சின்னப்பா தேவரின் வருகை தமிழ் சினிமாக்களில் விலங்குகளின் வருகையைப் பன்மடங்கு பெருக்கியது. ஒவ்வொரு படத்திலும் ஒரு விலங்கை அதிலும் குறிப்பாக காட்டு விலங்கை மையமாக வைத்து பல படங்கள் தயாரித்து வெற்றி பெற்றார் சின்னப்பா தேவர். தனது முதல் படமாக தாய்க்குப் பின் தாரத்தில் ஒரு காளையை மையக் கதாபாத்திரமாக்கியவர், தாயைக் காத்த தனயனின் ஒரு சிறுத்தைப் புலியை முக்கியக் கதாபாத்திரமாக்கினார். தாய்க்குப் பின் தாரம் படத்தின் வெற்றியால் அதன் பிறகு அவர் அவரது தேவர் பிலிம்ஸ் படத்தின் சின்னத்திலேயே ஒரு காளை இடம் பெற்ற வரலாறை கூற கடமைப்பட்டிருக்கிறோம்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோக்களுக்கு கவனிப்பு எப்படி உள்ளதோ அதே போல் விலங்குகளுக்கும் கவனிப்பு அதிகமாக இருக்கும். சில விலங்குகள் சினிமாவிற்கென தயாராகி, படங்களின் அங்கமாகவே மாறியிருந்தது.
இந்த கலாச்சாரம் அழிந்ததற்கு முக்கிய காரணம் பட்ஜெட். ஹாலிவுட்டில் இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி நம்ம ஊரில் இன்னும் வரவில்லை.
படங்களை பார்த்து வீட்டில் செல்ல பிராணிகள் வளர்த்த 90ஸ் கிட்ஸ் ஏராளம். 101 டால்மேஷன்ஸ், ஜங்கிள் புக் போன்ற திரைப்படங்கள் தமிழில் வெளியாகி ஹிட் அடிக்க.. இந்த ஃபார்முலா உருவானது. இனி இந்த ஜானரில் படங்கள் வருமா என்பது சந்தேகம் தான்.