இயக்குனர் T.ராஜேந்தர் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தேவையான பரிசோதனைகள் செய்து பார்த்ததில் அவருக்கு வயிற்றின் உட்பகுதியில் ரத்த கசிவு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்ற T.ராஜேந்தர் அவர்களுக்கு நெஞ்சுவலி மற்றும் வயிற்றுப் பகுதியில் இருக்கும் இரத்தக்கசிவுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ப்பட்டது. சிகிச்சைகள் நிறைவடைந்து T.ராஜேந்தர் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த T.ராஜேந்தர் அவர்களின் உடல்நிலை தற்போது பூரண குணமடைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து மருத்துவர்கள் அவரை ஒரு மாதம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தயுள்ளனர். எனவே T.ராஜேந்தர் அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கியிருந்து ஒரு மாதம் ஓய்வு பெறவுள்ளார்.

சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தருணத்தில் இருந்து உடனடியாக உயர் சிகிச்சைக்கு அமெரிக்கா அழைத்து வந்து தற்போது உயர் சிகிச்சைகள் முடியும் வரை உடன் இருந்த T.ராஜேந்தர் அவர்களின் மகனும் நடிகருமான சிலம்பரசன்.TR அனைத்து சிகிச்சைகளுக்கும் உடனிருந்து தன் தந்தையை கவனித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு மாத காலம் தனது தந்தை அமெரிக்காவில் ஓய்வு எடுப்பதற்கு T.ராஜேந்தர் மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு தற்போது சிலம்பரசன்.TR சென்னை திரும்பியுள்ளார். தந்தையின் உடல் நலன் கருதி அமெரிக்காவில் தந்தையுடன் இருந்து அனைத்து பணிகளையும் செய்து முடித்து தற்போது சென்னை திரும்பியுள்ள சிலம்பரசன்.TR தொடர்ந்து தனது படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.