இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் தோனி அவரது வாழ்கை வரலாற்று திரைப்படமாக கடந்த 2016 ம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான திரைப்படம் எம் எஸ் தோனி : தி அண்டோல்ட் ஸ்டோரி. இந்தியா முழுவதும் கிரிக்கெட் வீரர் தோனிக்கு ரசிகர்கள் உள்ளதால் மிகப்பெரிய வரவேற்பு அனைத்து மொழிகளிலும் இப்படத்திற்கு கிடைத்தது. மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் இப்படம் பெற்றது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் எம் எஸ் தோனியாக மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தத்ரூபமாக நடித்திருந்தார். மேலும் படத்தில் இவருடன் கியாரா அத்வானி, தீஷா பத்தானி, அனுபம் கேர், பூமிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்திய திரையுலகில் வெளியான ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் ரசிகர்கள் பெருமளவு கொண்டாடிய படமாக எம் எஸ் தோனி திரைப்படம் இருந்து வருகிறது.
திரைப்படம் வெளியாகி 7 வருடம் நிறைவடைந்த நிலையில் எம் எஸ் தோனி : தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தை மீண்டும் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி அப்படம் வரும் மே மாதம் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் அப்பதிவினை கொண்டாடி வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி அட்டகாசமாக விளையாடி வருகின்றது. சிஎஸ்கே விளையாடும் எந்த நகர மைதானமாக இருந்தாலும் சி எஸ் கே ரசிகர்களும் எம் எஸ் தோனி ரசிகர்களும் அரங்கம் நிறைந்து காணப்படுகின்றனர். இந்த முறை அதிகளவு சி எஸ் கே அணிக்கு ஆதரவு பெருகியுள்ளது. காரணம் இந்த ஆண்டு சீசனுடன் தோனி ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக வந்த செய்தியினால்.இதனால் தோனி ரசிகர்கள் இறுதியாக இந்த ஐபிஎல் கோப்பையை தோனி தலைமையில் சிஎஸ்கே அணி வெல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து உள்ளனர். தற்போது நிதானமாக சி எஸ் கே விளையாடி போட்டி பட்டியலில் மூன்றாவது இடம் வகிக்கிறது. வெற்றி கொண்டாட்டங்களை பார்த்து வரும் சிஎஸ் கே மற்றும் தோனி ரசிகர்களுக்கு எம் எஸ் தோனி : தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் வெளியாவது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.