தமிழ் சினிமாவின் சிறந்த நடிகரும் தயாரிப்பாளருமான நடிகர் சூர்யா தயாரித்து நடித்து கடந்த நவம்பர் 2ஆம் தேதி வெளிவந்து ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படம் ஜெய்பீம். இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மலை கிராமங்களில் வசிக்கும் இருளர் பழங்குடி இன மக்களின் துயரங்களையும் அவர்களுக்கு நேர்ந்த அநீதிகள் குறித்தும் ஜெய்பீம் திரைப்படம் ஆழமாக பேசியது.
மேலும் நடிகர் சூர்யா இருளர் பழங்குடி இன மக்களின் கல்வி நலனுக்காக முதல்வர் முன்னிலையில் ரூபாய் ஒரு கோடியை தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக வழங்கினார். முன்னதாக ஜெய்பீம் திரைப்படத்தை பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பட குழுவினரையும் சூர்யாவையும் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஜெய் பீம் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யாவிடம் சில கேள்விகளை எழுப்பும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,
ஜெய்பீம் உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தானா?
உண்மை நிகழ்வு நடந்த இடம் கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த முதனை கிராமமா? அல்லது விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கோணமலை கிராமமா?
ராஜாக்கண்ணுவை விசாரணை என்ற பெயரில் கொடூரமாக அடித்து படுகொலை செய்த காவல்துறை சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது தங்களுக்கு தெரியுமா?
அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டது ஏன்?
நீதிமன்ற விசாரணையில் அவரை குரு...குரு.. என்று அழைக்கும் வகையில் காட்சிகள் அமைத்தது ஏன்?
என கேள்விகளை எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சூர்யா தனது பதில் அறிக்கையை இன்று வெளியிட்டார் அந்த அறிக்கையில்,
படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் எந்த ஒரு சமுதாயத்தையும் இழிவுப்படுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாக நான் ஏற்கிறேன். அதேபோல் படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. “இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிற அறிவிப்பை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.
அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்ட குரல் “பெயர் அரசியலால்” மடை மாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.
சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும் பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக எவரையும் அவமதிக்க வேண்டிய என்னமோ தேவையோ எனக்கு இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். சமத்துவமும் சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம்.தங்கள் புரிதலுக்கு நன்றி!
என பதிலளித்துள்ளார். நடிகர் சூர்யாவின் முழு பதில் அறிக்கையை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.
மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு. @draramadoss அவர்களுக்கு… #JaiBhim pic.twitter.com/tMAqiqchtf
— Suriya Sivakumar (@Suriya_offl) November 11, 2021