தென்னிந்தியாவின் முன்னணி நடிகரான சூர்யா தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது கங்குவா படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் சூர்யா.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மகானத்தில் உள்ள டல்லாஸ் நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் கடந்த மே 6ம் தேதி மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்த இதில் வணிக வளாகத்தில் இருந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதில் ஹைதராபாத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணும் இறந்துள்ளார்.

உயிரிழந்த ஐஸ்வர்யா நடிகர் சூர்யாவின் மிக தீவிரமான ரசிகை. இச்சம்பவத்தை கேட்டு அதிர்ந்த நடிகர் சூர்யா இறந்த ஐஸ்வர்யா வீட்டிற்கு ஆறுதல் கடிதத்தை எழுதியுள்ளார். அதில், "துப்பாக்கி சூடு சம்பவத்தில் உங்கள் மகள் ஐஸ்வர்யாவை இழந்தது துரதிஷ்டமானது. இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.ஒரு சக மனிதராகவும் தந்தையாகவும் உங்கள் துயரத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன். உங்களின் மகளை நினைக்கும் போதெல்லாம் என் கைகளை பற்றிக் கொள்ளுங்கள்.. ஐஸ்வர்யா வானத்தில் பிரகாசமான நட்சத்திரமாக நம்மை கவனித்து கொண்டிருப்பார் என நம்புகிறேன்." என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதனுடன் ஐஷ்வர்யா பற்றி கடித்தத்தில், “நீங்கள் என் மீது வைத்திருந்த அன்பு என்றும் என் நினைவில் இருக்கும். என்னை உங்கள் வாழ்வில் ஒரு பகுதியாக வைத்திருந்த நீங்கள் இவ்வளவு சீக்கிரம் சென்றிருக்க வேண்டியதில்லை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பிராத்தனைகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐஸ்வர்யா அவரின் புகைப்படம் வைத்து நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வு குறித்த புகைப்படம் மற்றும் கடிதம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.