நடிகர் சூர்யா அவர்கள் தயாரித்து நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்து உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த திரைப்படம் ஜெய் பீம். இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த இந்த ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய பாராட்டுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றது. தற்போது ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்திருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து தனது X பதிவிட்டிருக்கும் நடிகர் சூர்யா அவர்கள்,
“ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். #JaiBhim”
எனக் குறிப்பிட்டு இருளர் மற்றும் பல்வேறு பழங்குடியின மக்களின் நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் இணைத்து வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில்,
“இருளர் சமுதாய மக்கள் மற்றும் பல்வேறு பழங்குடியினத்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய குறிப்பு
குடும்பங்களுக்குத் தேவையான கோரிக்கைகள்;
கான்கிரீட் வீடுகள், கழிப்பறைகள், குடிநீர், மின்வசதி, வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை;
இவற்றில் இதுவரை, 11,379 கான்கிரீட் வீடுகள் புதிதாக கட்டி வழங்கப்பட்டுள்ளன.
20,145 பேர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவும், 24,439 பேர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளும் புதியதாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதியதாக 3,138 வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களை வாங்க 17,095 குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதர இனங்கள் குறித்த விபரங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
தனிநபர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட விபரம்;
சாதிச் சான்றிதழ் 59,093 பேர்களுக்கும், நலவாரியங்களின் உறுப்பினர் அட்டை 35,353
பேர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்
வழங்கும் வகையில் பல்வேறு அரசு உதவித் தொகை திட்டங்களின் கீழ் 10,378 புதிதாக சேர்க்கப்பட்டு பயனடைந்து வருகின்றனர். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 36,088 பேர் புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளன.
விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புப் பகுதிகளின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் விபரம்;
3,650 தெரு விளக்குகள், 1383 குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீர் வசதிகள் ஏற்படுத்துதல், 1,880 குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், 6,482 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் என பல்வேறு பணிகள் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்கு இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.”
என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டுகளை பெற்ற ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்ததை குறிப்பிட்டு நடிகர் சூர்யா அவர்கள் பகிர்ந்த அந்த பதிவு இதோ…