பெங்களூரில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னடப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், கன்னட சினிமாவில் இளம் நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகப் புகார் கூறியிருந்தார்.
போதைப் பொருள் பயன்படுத்தும் கன்னட நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார். இதையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகைகள் ராகிணி திவேதியை செப்டம்பர் 4-ம் தேதி கைது செய்தனர். பின்னர் நடிகை சஞ்சனா கல்ராணி, அவர்கள் நண்பர்கள் உட்பட 14 பேரை கைது செய்தனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுமட்டுமல்லாமல் சட்டவிரோதமாக அவர்கள் சொத்து சேர்த்து இருப்பதும் தெரியவந்துள்ளதை அடுத்து, அமலாக்கத் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கில், கடந்த மாத இறுதிக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதில், போதைப் பொருள் விற்பனை, அது தொடர்பான விரிவான விளக்கங்களும் கைது செய்யப்பட்டவர்களின் தொடர்புகளும் இடம்பெறும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார்.
ஆனால், குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கிடையே, இவர்கள் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நடிகை ராகிணியின் ஜாமீன் சில முறை நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்ஹா, ஜோசப் ஆகியோர் அமர்வு முன்பு இன்று வந்தது. விசாரித்த நீதிபதிகள் கர்நாடக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.
நடிகைகள் ராகிணி மற்றும் சஞ்சனா இருவரும் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாம். நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ளவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் புத்தகங்களை சிறைச்சாலையில் படித்துவருவதாகக் கடந்த வாரத்தில் கூறப்பட்டது.
2020-ம் ஆண்டு திரைத்துறை சார்ந்தவர்களுக்கு மிக மோசமான ஆண்டு என்பதற்கு இதுவே சிறந்த சான்று. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கு துவங்கி தொடர்ச்சியாக பல கெட்ட செய்திகளை சந்தித்தது. கொரோனா எனும் துயரம் ஒருபுறம் இருந்தாலும், திரை நட்சத்திரங்கள் தொடர்பான தவறான செய்திகள் மறுபுறம் தென்பட்டது.