இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஈடு இணையற்ற ஜாம்பவானாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கிட்டத்தட்ட கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தனது ஸ்டைலால் கட்டிப்போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்தடுத்து லைகா ப்ரோடக்ஷன் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.

அந்த வகையில் முதலாவதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியமான கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார். நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த கிரிக்கெட்டை மையப்படுத்திய படமாக திரைப்படம் தயாராகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் யார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கும் நிலையில், தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் இந்த ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் படையப்பா படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்க, இந்திய சினிமாவின் ஒவ்வொரு அங்கத்தில் இருந்தும் ஒவ்வொரு நட்சத்திரமாக, மலையாள சினிமாவில் இருந்து மோகன் லால், கன்னட சினிமாவிலிருந்து சிவராஜ்குமார், தெலுங்கு சினிமாவில் இருந்து நடிகர் சுனில், ஹிந்தி சினிமாவில் இருந்து ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்துள்ளனர்.

மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன் உட்பட பலர் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டாரின் ரீசன்ட் ஃபேவரட் ஆல்பங்களாக கொண்டாடப்பட்ட பேட்ட, தர்பார் படங்களின் வரிசையில் ஜெயிலர் படத்திற்கும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் மோகன்லால் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படம் இதோ…