ஒட்டுமொத்த சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பை பெற்று தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது . கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது வயதில் 70களை தொட்ட போதும் குறையாத அதே வேகத்தோடு அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்களில் நடிக்க வருகிறார். அந்த வகையில் கடந்த சில வாரங்களாகவே ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 படத்தின் அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து தலைவர் 171 படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்க கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகும் லால் சலாம் படத்தில் மொய்தின் பாய் எனும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் அப்படத்திற்கான டப்பிங்கை நிறைவு செய்தார். இதை தொடர்ந்து அடுத்ததாக லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே முதல் முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆக 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் அசத்தலான ஒளிப்பதிவு படத்தொகுப்பாளர் நிர்மலின் கனக்கச்சிதமான எடிட்டிங் இயக்குனர் நெல்சனின் தனித்துவமான டார்க் காமெடி ஆக்சன் அவை அனைத்திற்கும் மேலாக ராக் ஸ்டார் அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என எல்லாம் மிகச்சரியாக இணைந்து ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு விருந்தாய் ஜெயிலர் திரைப்படத்தை கொண்டாட வைத்திருக்கிறது.
இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்றான கண்டெய்னர் கவிழும் ஸ்டண்ட் காட்சியின் மேக்கிங் வீடியோவை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளிவந்த சமயத்தில் இருந்தே ஒரு குறிப்பிட்ட ஷாட்டை ரசிகர்கள் மிகவும் கவனித்து ரசித்து வந்தனர். படத்தின் மிக முக்கியமான ஒரு காட்சியில் வில்லன் சிலைகளை கடத்தும் அந்த கண்டைனரை “ஜெயிலர்” ரஜினிகாந்த் மற்றும் அவரது குழுவினர் கவிழ்க்கும் காட்சி மிகவும் அட்டகாசமாக படம் பிடிக்கப்பட்டது. தியேட்டரிலும் அந்த காட்சி மிகப் பெரிய வரவேற்பை பெற்றதோடு அதே மாதிரியான மற்றொரு காட்சி கிளைமாக்ஸில் நடிகர் மோகன்லால் அவர்கள் நடிக்கும் போதும் இடம்பெறும். இந்த நிலையில் அந்த கண்டைனர் கவிழும் காட்சியை படக்குழுவினர் 8 கேமராக்களில் படம் பிடித்த மேக்கிங் வீடியோவை ஜெயிலர் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் தனது X பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதிரடியான அந்த மேக்கிங் வீடியோ இதோ…