இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான முதல் ஆயிரம் இலவச பாஸ்களை ரசிகர்கள் எத்தனை நொடிகளில் கைப்பற்றினர் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக விளங்கும் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். இதனிடையே கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகை தமன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய,ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அனிருத் இசையில் வெளிவந்த காவாலா மற்றும் ஹுக்கும் ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ட்ரெண்டிங் ஹிட் ஆகியிருக்கின்றன. ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்ததது.
வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற சூலை 28ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வரும் ரசிகர்களுக்கு ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. திங்கட்கிழமை ஜூலை 24ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் இந்த டிக்கெட்டுகள் வழங்கப்பட இருப்பதாகவும், முதலில் வரும் 500 பேருக்கு ஒருவருக்கு இரு டிக்கெட்டுகள் வீதம் ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்க இருப்பதாகவும் தற்போது அறிவித்தது. http://jailer.sunpictures.in என்ற தளத்தில் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்தனர்.
முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்கள் ஜெயலலிதா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவால் உற்சாகம் அடைந்து இருக்கின்றனர். எனவே இன்று மதியம் ஒரு மணிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில், புக்கிங் தொடங்கிய ஒரு சில வினாடிகளிலேயே ஆயிரம் டிக்கெட்டுகளும் தீர்ந்தன. ஆம் வெறும் 15 நொடிகளில் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான இலவச டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு இதோ…