கே ஜி எஃப் படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் சலார் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த ருசிகர தகவல் தற்போது வெளியானது. தெலுங்கு சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் மிகப் பிரபலமடைந்தார். பாகுபலி படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறின. இருப்பினும் பிரபாஸ் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்த வகையில் ராமாயணத்தை கதைக்களமாக கொண்டு பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் தான் ஆதிபுரூஷ். பிரம்மாண்ட படைப்பாக பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த ஆதிபுரூஷ் வருகிற ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரைப்படமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் ப்ராஜெக்ட் கே படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் ப்ராஜெக்ட் கே படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மிக பிரம்மாண்ட படைப்பாக 500 கோடி ரூபாய்க்கும் மேல் பொருட்செலவில் தயாராகும் ப்ராஜெக்ட் திரைப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் கே ஜி எஃப் திரைப்படங்களின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் அதிரடி திரைப்படம் தான் சலார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் மிரட்டலான வில்லனாக நடிக்கும் சலாம் படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Hombale Films நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி வரும் சலார் திரைப்படத்திற்கு புவன் கௌடா ஒளிப்பதிவில் உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவரும் சலார் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த 2023 ஆம் ஆண்டு வருட செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் சலார் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சலார் திரைப்படத்தில் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாக நடிகை ஸ்ரியா ரெட்டி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தமிழில் திமிரு திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த ஸ்ரியா ரெட்டி, தொடர்ந்து வெயில் , காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த சுழல் - The Vortex வெப் சீரிஸில் காவல்துறை அதிகாரியாக நடித்த கவனத்தை ஈர்த்த நடிகை ஸ்ரியா ரெட்டி தற்போது சலார் படத்தில் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்து இருக்கிறார். இதுகுறித்து படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்களோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சலார் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ…