தொடர்ந்து தரமான திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கும் நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

முன்னதாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இதனை அடுத்து இயக்குனர் P.S.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் சர்தார் திரைப்படம் இந்த ஆண்டு (2022) தீபாவளி வெளியீடாக ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக சகுனி, காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் ஆகிய படங்களின் வரிசையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி என சிறந்த திரைப்படங்களை கொடுத்துவரும் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த புதிய படத்தில் நடிகர் கார்த்தியின் கதாபாத்திரம் குறித்த ருசிகர தகவல் தற்போது வெளியானது.

நடிகர் கார்த்திக் இதுவரை தனது திரைப்பயணத்தில் ஏற்காத புதிய மற்றும் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த கதாப்பாத்திரத்திற்கான ஒத்திகை மற்றும் பயிற்சியில் கார்த்தி ஈடுபட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.