தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகம் என்றே கூறலாம். எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் லேசான தொற்றுடன் சென்ற அவருக்கு திடீரென, பாதிப்பு அதிகமானது. இதனால் ஐசியூவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் கலக்கமடைந்தனர். எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகனும் பாடகருமான எஸ்பி சரண் அடிக்கடி அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் எஸ்,பி.பி-யின் உடல் நிலை குறித்து வீடியோ வாயிலாகவோ, பதிவின் மூலமாகவோ ரசிகர்களுக்கு அப்டேட் கூறி வந்தார்.
சமீபத்தில் சரண் செய்த பதிவில், அப்பா நலம் பெறுவதற்கான நிலையை நோக்கி தொடர்ந்து சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார். வாய்வழி திரவங்களுடன் எக்மோ/ வெண்டிலேட்டர், பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. விரைவில் மருத்துவமனையிலிருந்து வெளியேற அவர் ஆர்வமுடன் உள்ளார் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதென ஆஸ்பத்திரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று மாலை 6:30 மணியளவில் வெளியான இந்த அறிக்கையில், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதெனவும், கடந்த 24 மணிநேரத்தில் அவரது நிலைமை மோசமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளனர். இதனால் மிகுந்த சோகத்தில் உள்ளனர் எஸ்.பி.பி ரசிகர்கள்.