தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சூரி தற்போது மிகச் சிறந்த நடிகராக புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகி இருக்கும் விடுதலை திரைப்படத்தில் குமரேசன் என்னும் காவலர் கதாப்பாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்துள்ள சூரி உடன் இணைந்து மிக முக்கிய வேடத்தில் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் 31ம் தேதி வெளிவந்து ரசிகர்களுடைய ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது. R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள விடுதலை திரைப்படம் ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சூரி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் சூரி தனது திரை பயணத்தின் மலரும் நினைவுகள் சிலவற்றை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், கலாபக் காதலன் திரைப்படத்தின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்த போது, அது குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது, “இந்தப் படத்திற்காக ஆடிஷன் வைத்தார்கள். நான் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில் இந்த படத்திற்காக அந்த ஆடிசனுக்கு சென்று இருந்தேன் நிறைய கூட்டம் இருந்தது. அப்போது நான் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டேன். சாப்பிடாமல் சென்றதால் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அப்போது என்னை எதிரில் உட்கார வைத்து, எனக்கு தண்ணீர் கொடுத்து டீ கொடுத்து எந்த ஊர் என்றெல்லாம் விசாரித்தார்கள் நான் மதுரையில் இருந்து வருகிறேன். வாய்ப்பு தேடி வந்திருக்கிறேன். என்பதெல்லாம் நான் சொன்ன பிறகு என்னை அனுப்பி வைத்தார்கள். இதுதான் இந்த கலாபக் காதலன் ஆபீசில் நடைபெற்ற என்னுடைய ஒரு பதிவு. பின்னர் சினிமாவில் நான் நிறைய வாய்ப்பு தேடி அலைந்து எனக்கு வாய்ப்பு கிடைத்து, சுசீந்திரன் அண்ணன் அவர்களின் வெண்ணிலா கபடிக்குழு என்ற ஒரு படத்தில் நடித்து, அதன் பிறகு நடிகனாக ஆனப்பிறகு இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கென தனியாக ஒரு ஆபீஸ் தேவைப்பட்டது. அப்போது அந்த ஆபீஸ் வாங்க போகும்போது நான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தேன் என்னுடைய மேலாளரை அனுப்பினேன். ஆனால் கடைசி நேரத்தில் என்னுடைய மனைவி அந்த இடம் கொஞ்சம் விலை ஜாஸ்தியாக இருக்கிறது, கிட்டத்தட்ட ஒரு 20 லட்சம் வரை அதிகமாக இருப்பது போல் இருக்கிறது. அந்த இடம் சரிப்பட்டு வராது என்பது போல கூறினார். அப்போது இரவு நான் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பும் போது என்னுடைய மேலாளரோடு அந்த இடத்தை பார்க்க சென்றேன். ஏற்கனவே அது என்ன ஏரியா என்று அவர் சொல்லிவிட்டார். எனவே எனக்கு அது தெரியும் ஆனால் அந்த இடத்திற்குள் செல்ல செல்ல எனக்கு ஏதோ ஒரு மலரும் நினைவுகள் வந்து கொண்டே இருந்தன. கடைசியில் அந்த கட்டிடத்திற்கு முன்பு நின்று இதுதான் அந்த வீடு அந்த ஆபீஸ் என்று சொன்னபோது, கலாபக் காதலன் படம் நினைவுக்கு வந்தது. “என்ன விலை சொல்கிறார்கள்?” என கேட்டேன், “இந்த விலை சொல்கிறார்கள்” என்றார் உடனே வாங்குங்கள் என சொன்னேன். அதன் பிறகு என் மனைவியிடம் இதை நான் சொல்லவே இல்லை. எல்லாம் முடிந்த பிறகு அவளிடம் இந்த உண்மையை சொன்னேன் அவள் கண்கலங்கி விட்டாள். இதற்கு 20 லட்சம் அல்ல 60 லட்சம் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன்.” என நடிகர் சூரி பதிலளித்துள்ளார். நடிகர் சூரியின் அந்த அட்டகாசமான பேட்டி இதோ…