சூரரைப் போற்று படத்தின் சூர்யா நடித்த வலிமிகுந்த காட்சிகளை வெளியிட்டுள்ளது அமேசான் ப்ரைம் நிறுவனம். விமான நிலையத்தில் சூர்யா அழுது நடித்த காட்சியை பார்த்த ரசிகர்கள், சூர்யாவுக்கு தேசிய விருதே கிடைக்கும் என்று புகழாரம் சூட்டினர். அந்த அளவிற்கு காட்சிகளில் கச்சிதம் காண்பித்திருப்பார் சூர்யா.
தீபாவளிக்கு வெளியான இந்த படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசிகர்கள் தாண்டி திரையுலகினரையும் இந்த படம் பெரிதளவில் ஈர்த்தது.
சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சூர்யா 40 படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரியிலிருந்து படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நவரசா ஆந்தாலஜியில் கவுதம் மேனன் இயக்கும் கதையில் நடித்து வருகிறார் சூர்யா. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இக்கதையில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ப்ரயாகா மார்டின் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கெனவே தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படத்தில் நாயகியாக நடித்திருந்தவர்.
சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் 'நவரசா' என்ற ஆந்தாலஜி எடுக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் திரைத்துறைக்கு ஆதரவு தர வேண்டும் என்று இலவசமாக பணியாற்றியிருக்கிறார்கள்.