2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் பணிகளை செய்திருந்தார். கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல் அமேசான் ஓடிடியில் இப்படம் வெளியானது. திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. சூரரைப் போற்று படம் பார்த்துவிட்டு ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சூரரைப் போற்று... நிறையக் கற்பனை இருந்தாலும், என்னுடைய புத்தகத்தின் மையக் கருவை அற்புதமாகப் படம்பிடித்துள்ளது. உண்மையான ரோலர் கோஸ்டர் அனுபவம்.
நினைவுகளைத் தூண்டிய பல குடும்பக் காட்சிகளில் சிரிப்பையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாடகத்தன்மை இருந்தாலும், பெரும் முரண்பாடுகளுடன் கூடிய பின்தங்கிய கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கைக்கு உண்மை சேர்க்கிறது என்று பாராட்டினார்.
அமேசான் ப்ரைமில் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டாடி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். படத்தின் பாடல் வீடியோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டது படக்குழு. கடைசியாக சூரரைப் போற்று படத்தின் ஹீரோயின் பொம்மி பாத்திரம் மற்றும் பக்தவச்சலம் நாயுடு பாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தனர் படக்குழுவினர்.
இந்நிலையில் படத்தின் காட்சிகள் உருவானது குறித்து ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி பேசியுள்ளார். இந்த மேக்கிங் வீடியோவில் ஒவ்வொரு காட்சிகளையும் இயக்குனர் சுதா கொங்கராவின் ரசனைக்கு ஏற்ப நிகேத் எப்படி படம்பிடித்துள்ளார் என்று காட்டப்பட்டுள்ளது. படத்தில் பெரும்பாலான காட்சிகள் விமானத்திற்குள்ளே படமாக்கப்பட்டதால், அதற்கு ஏற்றார் போல் லைட்டிங் அமைக்கப்பட்டதாக பேசியுள்ளார்.