கடந்த 2013 ல் விஜய் சேதுபதி நடிப்பில் டார்க் காமெடி திரில்லர் திரைப்படமாக வெளியாகி மீகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் சூதுகவ்வும். சிவி குமார் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அசோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சித்தா ஷெட்டி, ரமேஷ் திலக், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் யாக் ஜாப்பீ, ராதா ரவி உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருபார். புது விதமான கூட்டணி வித்யாசமான கதைக்களம் என்று ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த அட்டகாசமான டார்க் காமெடி திரைப்படம் சூது கவ்வும். வரவேற்பு ஒருபுறம் கிடைத்தாலும் ரூ 2 கோடியில் உருவான இப்படம் வசூலிலும் ரூ 35 கோடி வசூல் ஈட்டி கவனம் பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தின் தயாரிப்பாளர் சிவி குமார் அவர்கள் இரண்டாம் பாகம் குறித்த தகவலை பகிர்ந்து ரசிகர்களை குதூகலப் படுத்தினார்.

இந்நிலையில் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் அதிரடியாக தொடங்கப்பட்டுள்ள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி இல்லை என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்தாலும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா நடிப்பது ரசிகர்களை ஆசவாசப் படுத்தியுள்ளது. அதே மாதிரி இயக்குனரும் நலன் குமார சாமி கிடையாது. பிரபு தேவாவை வைத்து ‘யங் மங் சங்’ என்ற படத்தை இயக்கிய அர்ஜுன் சூது கவ்வும் 2 பாகத்தை இயக்கவுள்ளார். சிவி குமார் தயாரிப்பில் உருவாகும் இப்டத்தில் கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி, யாக் ஜாப்பீ ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்ய இகனேடியஸ் அஷ்வின் படத்திற்கு படத்தொகுப்பு செய்யவுள்ளார்.

புது குழுவுடன் கலமிறங்கவிருக்கும் சூது கவ்வும் 2படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. படத்தின் டைட்டில் போஸ்டரில் கூடுதலாக ‘நாடும் நாட்டு மக்களும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் அரசியல் சார்ந்த கதையாக உருவாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மிர்ச்சி சிவா நடிப்பில் முன்னதாக ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ என்ற படம் வெளியானது. நகைச்சுவை திரைப்படமாக வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஹிட் படமான சூது கவ்வும் கதைக்களத்தில் சிவா இணைந்துள்ளதையடுத்து இப்படம் அவருக்கு முக்கியமான படமாக அமைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப் படுகிறது.