மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் ஏலியன் சயின்ஸ் பிக்சன் படமான அயலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு தற்போது வெளியானது. நீண்ட காலமாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் அயலான் திரைப்படம் தற்போது ரிலீஸை நெருங்கி இருக்கிறது. இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ள அயலான் திரைப்படத்தில், இஷா கோபிகர், சரத் கேல்கர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அயலான் திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், “அயலான் திரைப்படத்தின் 2வது பாடல் விரைவில் வர இருப்பதாகவும், அயலான் படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இதர அறிவிப்புகள் தொடர்ந்து வர இருப்பதாகவும்” குறிப்பிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
இதுவரை இந்திய சினிமா பார்த்திராத அட்டகாசமான ஒரு ஏலியன் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகும் இந்த அயலான் திரைப்படத்தில் 4500க்கும் VFX SHOTகள் இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. நடிகர் சிவகார்த்திகேயனின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் கிட்டதட்ட 65க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அயலான் திரைப்படம் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட அயலான் திரைப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் மற்றும் VFX பணிகளுக்கான தேவை இருப்பதால் படத்தை 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளியிட திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
அதே சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் லால் சலாம், நடிகர் தனுஷின் அதிரடி பீரியட் ஆக்சன் திரில்லர் படமான கேப்டன் மில்லர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஹிந்தி படமான மெர்ரி கிறிஸ்மஸ் உள்ளிட்ட படங்களும் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் அயலான் திரைப்படம் வெளிவருவதில் சிக்கல் இருப்பதாக சில போலியான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அது குறித்து பட குழுவினர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து கட்டாயமாக பொங்கல் வெளியீடாக அயலான் படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் எந்த தமிழ் படத்திற்கும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் படக்குழுவினர் இன்னும் 45 நாட்களில் அயலான் படம் ரிலீஸ் ஆகும் என கடந்த நவம்பர் 28ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். நவம்பர் 28ஆம் தேதியிலிருந்து கணக்கு வைத்துக்கொண்டால் 45 நாட்களில் என்று பார்க்கும் போது ஜனவரி 12ஆம் தேதி அயலான் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்து இருப்பதாக தெரிகிறது. எனவே விரைவில் அந்த ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வகையிலான புதிய அறிவிப்பையும் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.