சிங்கம்பட்டி ராஜாவான முருகதாஸ் தீர்த்தபதி வயது முதிர்வின் காரணமாக தனது 89-வது வயதில் காலமானார். அவரின் மறைவு சிங்கம்பட்டி ஜமீன் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டதற்கு முன்பே முருகதாஸ் தீர்த்தபதி பதவி ஏற்றுவிட்டதால், இவர் தான் கடைசி ராஜா என்று கூறப்படுகிறது. ஜமீன் முறை இல்லையென்றாலும் அந்த ஊர் மக்கள் ராஜாவிற்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை அளித்து வந்தனர்.
சிங்கம்பட்டி ராஜாவின் வாழ்க்கையை மையமாக கொண்டே, சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா என்ற படம் உருவானது. பொன்ராம் இயக்கிய இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சூரி, நெப்போலியன், சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் சிங்கம்பட்டி ஜமீன் மறைவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா! அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.