மானாமதுரை கனரா வங்கியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த ஆவாரங்காட்டை பகுதியைச் சேர்ந்த அமமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் சரவணன், ஒப்பந்தங்கள் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகத் தங்கமணி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இதில், தங்கமணி இன்று மானாமதுரையில் உள்ள கனரா வங்கி அருகே வந்துகொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த அவர், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அருகில் உள்ள கனரா வங்கிக்குள் நுழைந்துள்ளார்.
தங்கமணி ரத்தம் சொட்டச் சொட்ட ஓடி வந்ததைப் பார்த்த வங்கியிலிருந்த வாடிக்கையாளர்கள், கூச்சலிட்டனர். இதனையடுத்து, தங்கமணியைக் கொலை செய்ய அரிவாளுடன் வங்கியில் நுழைந்த கொலையாளிகள், அவரை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது, திடீரென்று வங்கிக் காவலாளி செல்ல நேரு, தான் வைத்திருந்த துப்பாக்கியால், கொலையாளிகளைப் பார்த்துச் சுட்டுள்ளார். இதில், 6 கொலையாளிகளில் தமிழ் செல்வன் மீது குண்டு பாய்ந்து, அவர் சரிந்து கீழே விழுந்தார்.
துப்பாக்கிச் சூட்டால் பயந்துபோன, கொலைக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் வங்கியிலிருந்து உயிர் பயத்தில் தலைதெறிக்க வெளியே ஓடியுள்ளனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த போலீசார், ரத்த வௌ்ளத்தில் கிடந்த தங்கமணியையும், தமிழ்ச்செல்வனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், இந்த கொலை முயற்சி தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய 5 பேரையும் தேடி வருகின்றனர். இதனிடையே, பழிக்குப் பழியாக நடந்த கொடூரச் சம்பவத்தால், மானாமதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.