இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மிகப்பெரிய ஓபனிங் கொண்ட திரைப்படம் என்றால் அது அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான ‘துணிவு’ திரைப்படம் தான். கடந்த ஜனவரி 11 ம் தேதி பொங்கலையொட்டி மிகப்பெரிய ஆரவாரத்துடன் உலகமெங்கும் பல திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதல் இன்று வரை ரசிகர்கர்களின் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை. வங்கி கொள்ளையை மையப்படுத்தி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியுடன் இந்த ஆண்டினை துணிவு திரைப்படம் துவக்கி வைத்துள்ளது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற துணிவு திரைப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ரசிக்கும் படியே அமைந்தது. போனி கபூர் தயாரிப்பில் அஜித் உடன் இணைந்து இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரகனி, ஜான் கொக்கன் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஜிப்ரான் இசையமைக்கும் 50 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பாடல்கள் பின்னணி இசை முன்னதாக வெளியாகி பெரும் வரவேற்பு கிடைத்தது. ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய பாடல்கள் அனைத்தும் திரையிலும் ரசிக்கும்படியாக அமைந்தது.
இந்நிலையில் படத்தில் அமைந்துள்ள ‘கேங்க்ஸ்டா’ பாடலை பாடியவரும் எழுதியவருமான ஷபீர் சுல்தான் அப்பாடலின் மாற்று பாடல் வரிகளை தனது சமூக தளத்தில் பதிவேற்றியுள்ளார். விவேகா மற்றும் ஷபீர் சுல்தான் இணைந்து எழுதிய அப்பாடலை தன்னம்பிக்கை வரிகள் வெளியான அன்று பெரிதும் பேசப்பட்டது. ‘பயந்து வாழும் கூட்டத்துல துணிஞ்சு வாழ்ந்தா மாஸ்’ போன்ற வரிகளுடன் கூடிய கேன்க்ஸ்டா பாடலுக்கான மாற்று வரிகள் தற்போது அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்திற்காக 10க்கு மேற்பட்ட பயன்படுத்தாத பின்னணி இசை உள்ளது என்ற பதிவு போல் இந்த பதிவும் ஒலி வடிவில் கேட்கவேண்டும் என்று படக்குழுவினரை கேட்டுக்கொண்டு வருகின்றனர். திரையில் வெற்றிநடைபோட்டிருந்த துணிவு திரைப்படம் வரும் பிப் 8 ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திலும் ஒளிபரப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.