தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸின் வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழ்கிறார். அந்த வகையில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீமன், ஸ்ரீகாந்த், ஷியாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழில் வாரிசு திரைப்படத்தின் வசனங்களை பிரபல பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரியில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. அதே பொங்கல் வெளியீடாக அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரஞ்சிதமே பாடலை தளபதி விஜய் உடன் இணைந்து பாடிய பிரபல பாடகி MM.மானசி நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் ரஞ்சிதமே பாடல் குறித்தும் தளபதி விஜய் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
அந்த பேட்டியில், “ தளபதி விஜய் பாட ஆரம்பித்ததும் நாங்கள் அனைவரும் விழுந்து விட்டோம்… வாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே பாடல் மூலம் மூன்றாவது முறையாக தளபதி விஜய் உடன் இணைந்துள்ளேன். முதலாவதாக தலைவா படத்தில் “வாங்கண்ணா வணக்கங்கண்ணா” பாடலில் வரும் ஹம்மிங்கை பாடும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து புலி படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களின் இசையில் சங்கர் மகாதேவனுடன் இணைந்து “சொட்ட வால” பாபலை பாடினேன். இந்த முறை தளபதி விஜய் உடனே இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்து, வாரிசு படத்தில் “ரஞ்சிதமே” பாடலை அவரோடு இணைந்து பாடி இருக்கிறேன். இதைவிட வேற என்ன வேண்டும்” என மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். பாடகி MM.மானசியின் அந்தப் பிரத்தியேக பேட்டி இதோ…