இந்திய சினிமாவின் சிறந்த பின்னணி பாடகிகளில் ஒருவராக திகழும் சின்மயி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும், பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் டப்பிங் கலைஞராகவும் பல முன்னணி நட்சத்திர நாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.
குறிப்பாக AR.ரஹ்மான், இளையராஜா, தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், பரத்வாஜ், D.இமான்,தேவி ஸ்ரீ பிரசாத், GV பிரகாஷ் குமார், மணிசர்மா, ஜிப்ரான், S.தமன், கோவிந்த் வசந்தா, கோபி சுந்தர் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரது இசையிலும் சின்மயி பாடியுள்ளார்.
முன்னதாக பிரபல நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை கடந்த 2014-ஆம் ஆண்டு சின்மயி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இரட்டை குழந்தைக்கு தாயாகி உள்ள பாடகி சின்மயிக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இருப்பினும் ஒருபுறம் பாடகி சின்மயி சரோகஸி (வாடகை தாய்) முறைப்படி குழந்தை பெற்றுக் கொண்டதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன. மேலும் நேரடியாக சின்மயி இடமும் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி மூலம் பலர் இதனை கேட்டுள்ளனர். எனவே இந்த வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதவியில், நான் கர்ப்பமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடாத காரணத்தினால் பலரும் “சரோகஸி முறைப்படி குழந்தை பெற்றுக் கொண்டீர்களா?” என தொடர்ந்து கேட்டு வருகின்றனர். எனது மிக நெருங்கிய வட்டாரத்திற்கு மட்டுமே நான் கர்ப்பமாக இருந்த விஷயம் தெரியும். என் வாழ்க்கை குறித்து மிகுந்த பாதுகாப்போடு இருப்பேன் என் நட்பு வட்டாரம் என் குழந்தைகள் எப்போதும் எனது சமூக வலைதளங்களில் அதிக தென்பட மாட்டார்கள். உங்களுக்கு தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் ஒன்றை தெரிவிக்கிறேன், எனக்கு சிசேரியன் நடைபெற்ற பொழுது எனது இரட்டை குழந்தைகள் இந்த உலகிற்கு வந்த அந்த சமயத்தில் நான் ஒரு "பஜன்" பாடினேன்… மற்ற விவரங்களை பிறகு பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் இப்போதைக்கு இது போதும்! என தெரிவித்துள்ளார். சின்மயி-ன் அந்த பதிவு இதோ…