நடிகர் சித்தார்த் நடிப்பில் பக்கா ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக தயாராகி இருக்கும் டக்கர் திரைப்படம் நாளை ஜூன் 9ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியன் 2, சித்தா மற்றும் டெஸ்ட் என அடுத்தடுத்து வரிசையாக சித்தார்த் நடிப்பில் திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. இதுபோக பெயரிடப்படாத ஒரு புதிய ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்துள்ள சித்தார்த் மீண்டும் டக்கர் படத்தின் இயக்குனர் கார்த்திக்.ஜி.கிரிஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சித்தார்த் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் தனது திரை பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தளபதி விஜய் சித்தார்த் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு பேசிய ஒரு ஸ்பெஷல் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய தளபதி விஜய், “சித்தார்த்தை எனக்கு பொதுவாகவே மிகவும் பிடிக்கும். சித்தார்த் படங்கள் எல்லாமே நான் பார்த்திருக்கிறேன் தெலுங்கில் செய்த படங்கள் ஹிந்தியில் ரங்கே பசந்தி உள்ளிட்ட எல்லா படங்களை பார்த்திருக்கிறேன். ரொம்பவே க்யூட்டான ஒரு நபர் க்யூட்டான ஒரு பர்ஃபாமர்" என பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய சித்தார்த், “அவர விட க்யூட்டா யாராவது இருக்க முடியுமா?” என பேச தொடங்கினார். தொடர்ந்து பேசிய போது, “2006 ஆகஸ்ட் மாதம் நான் தங்கி இருந்த ஹோட்டலில் கீழ்த்தளத்தில் அவர் தங்கி இருந்தார். கூப்பிட்டார்.. போய் நாங்கள் இருவரும் டின்னர் சாப்பிட்டோம். அவருக்கு பொமரில்லு என்ற படம் அவ்வளவு பிடித்திருந்தது. உலகம் ரொம்ப மாறிவிட்டது. நான் அவரை விஜய் என்று தான் கூப்பிடுவேன். ஆனால் இப்போது நான் விஜய் என கூப்பிட்டால் அவரை இப்படி கூப்பிடுங்கள் அப்படி கூப்பிடுங்கள் மரியாதை இல்லாமல் பேசுகிறீர்கள் என இந்த உலகம் அப்படி தயாராகி இருக்கிறது. ஆனால் அவர் அந்த மாதிரியான ஒரு ஆள் கிடையவே கிடையாது. உண்மையில் க்யூட்டான ஆள் அவர் தான். பொம்மரிலு பார்த்துவிட்டு இந்த சீன் எப்படி செய்தாய் எனக் கேட்பார் இந்தப் பாடலில் ஒரு ஷாட்... அப்போதெல்லாம் போன் எடுத்து ஒரு வீடியோ காட்டுவது என்பதெல்லாம் கிடையாது. அவர் நடித்துக் காட்டுகிறார். “இந்தப் பாடலில் கடைசில ஒன்னு பண்ணியே?” என அவர் செய்து காட்டுகிறார். “சூப்பரா இருக்கு இத நான் பண்ணலயே” என சொன்னேன். “டேய் நீ எப்படி பண்ணன்னு என சொல்லிக் கொடுய்யா?” என கேட்கிறார். அந்த ஒரு அன்பை அவர் காட்டுவார் அந்த அன்பை விஜய் மாதிரி யாருமே காட்ட முடியாது என நம்புவேன். இந்த வீடியோ 2011ல் அவர் பேசிய வீடியோ… அவர் மீண்டும் 2014ல் ஒரு வீடியோ செய்தார் காவியத்தலைவன் படம் பார்த்துவிட்டு, நான் அவரை எப்போது சந்தித்தாலும் அவரை ரொம்ப நேரம் கட்டிப்பிடித்துக் கொண்டு விடவே மாட்டேன் அவரை ரொம்ப பிடிக்கும், அவருக்கும் என் மேல் ரொம்ப அன்பு இருந்திருக்கிறது.” என பேசியுள்ளார். ட்ரெண்டாகும் அந்த முழு வீடியோ இதோ…