இந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் தயாராகி இருக்கும் சித்தா திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ச்சியாக பல வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தரமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு வெரைட்டியான படங்களை வழங்கி வரும் சித்தார்த் நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த டக்கர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் வரிசையாக வெளிவர இருக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்க, மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்தில் சித்தார்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, தற்போது தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தன்னுடைய காதலில் சொதப்புவது, எப்படி ஜில் ஜங் ஜக் மற்றும் அவள் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த சித்தார்த் அடுத்த படைப்பாக தனது தயாரிப்பு நிறுவனமான ETAKI என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் தான் சித்தா.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி மற்றும் சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் S.U.அருண் குமார் சித்தா படத்தை எழுதி இயக்கியுள்ளார். சித்தார்த் மற்றும் நிமிஷயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சித்தா திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சுரேஷ் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கும் சித்தா திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பின்னணி இசை சேர்த்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் இயக்குனரான அருண்குமார் மற்றும் கவிஞர் யுக பாரதி ஆகியோர் சிட்டா படத்தின் பாடல்களை எழுதியுள்ளனர். C.S.பாலச்சந்தர் கலை இயக்கம் செய்திருக்கும் சித்தா திரைப்படத்திற்கு கவிதா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
மிகவும் அழுத்தமான கதைக்களத்தில் மக்களின் மனதை தொடும் எமோஷனலான படமாக வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி சித்தா திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் சித்தார்த்தன் சித்தா திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. இதுவரை தான் நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகவும் அழுத்தமான எதார்த்தமான ஒரு கதாபாத்திரத்தில் சித்தார்த் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பது ட்ரெய்லரில் மிகத் தெளிவாக தெரிகிறது. அதேபோல படமும் மிகச் சிறப்பான வரவேற்பையும் பாராட்டுகளையும் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்று முன்பு வெளிவந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த சித்தா திரைப்படத்தின் ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.