ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக பின்னர் பாலிவுட்டில் கதாநாயகியாக களமிறங்கிய நடிகை ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அந்த வகையில் தமிழில் கடைசியாக மறைந்த இயக்குனர் SP.ஜனநாதன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த லாபம் திரைப்படத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தெலுங்கில் கடைசியாக ஒரே தினத்தில் இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் நந்தாமுரி பாலகிருஷ்ணா ஆகியோரது நடிப்பில் மாஸ் திரைப்படங்களாக வெளிவந்த வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்மர் ரெட்டி ஆகிய திரைப்படங்கள் கடந்த ஜனவரி மாதம் சங்கராந்தி வெளியீடாக ரிலீஸாகி நல்ல வரவேற்பு பெற்றன. இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிகை ஸ்ருதிஹாசன் தான் கதாநாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களையும் தனது திரைப்பயண அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் படம் நடிக்காதது குறித்து, “தமிழ் சினிமாவில் நாங்கள் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம்... எங்கே போனீர்கள்?” என கேட்டபோது, “எங்கேயும் போகவில்லை... கோவிட் வருவதற்கு முன்பு லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தேன். கோவிட் வந்ததற்கு பிறகு அனைவரது வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் சிலர் வாழ்க்கை தலைகீழாகவே மாறியது... அதன் பிறகு தெலுங்கில் கிராக் திரைப்படம் ரிலீஸ் ஆனது. சலார் படத்தில் நடித்தேன். பின்னர் வால்டர் வீரய்யா வந்தது. தொடர்ந்து வீரசிம்ம ரெட்டி படம்... இவற்றுக்கு இடையே ஒரு ஆங்கில திரைப்படம் இருந்தது. இந்த ஆங்கில திரைப்படத்திற்காக மூன்று மாதங்கள் நான் கிரீஸில் இருக்க வேண்டி இருந்தது. எனவே லாஜிக்கலாக பார்க்கும் போது, கடந்த ஆண்டில் எனக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான நேரமே கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனவே இந்த ஆண்டில் கட்டாயமாக தமிழ் சினிமாவில் நடிப்பேன் என எனக்கு நானே உறுதி எடுத்து இருக்கிறேன். உங்கள் அனைவரோடும் பேசி கொண்டிருக்கிறேன். மீண்டும் இங்கே வந்திருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என ஸ்ருதி ஹாசன் பதிலளித்துள்ளார். எனவே லாபம் திரைப்படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்களில் கமிட் ஆகாமல் இருந்த நடிகை ஸ்ருதி ஹாசன் வெகு விரைவில் புதிய தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வரும் என தெரிகிறது. நமது கலாட்டா சேனலில் நடிகை ஸ்ருதி ஹாசன் கலந்து கொண்ட அந்த சிறப்பு பேட்டி இதோ…