தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சாந்தனு. தொடர் தோல்விக்கு பிறகு தனது திரைப்படங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்து தற்போது நடித்து வருகிறார். அதன் படி அவரது திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கையில் நடித்த திரைப்படம் ‘இராவண கோட்டம்’ நீண்ட இடைவெளிக்கு பின் இந்த திரைப்படம் நேற்று மே 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களில் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. கண்ணன் ரவி குழுமம் தயாரிப்பில் உருவான இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்படம் ‘மதயானை’ கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கியுள்ளார். படத்தில் சாந்தனு, பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி, சுஜாதா, தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் வெற்றி வேல் ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
கருவேல மரம் அதன் பின்னணியில் நிலவில் கார்பரேட், அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி மண் சார்ந்த பிரச்சனையை பேசும் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து நேற்று வெளியான இப்படத்திற்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து நேர்மறையான விமர்சனங்களை வழங்கி வருகின்றனர். மேலும் திரைப்பிரபலங்கள். அரசியல் பிரமுகர்கள் ரசிகர்கள் இப்படம் குறித்து தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இராவண கோட்டம் படத்தில் இடம் பெற்ற அட்டகாசமான காட்சியை முன்னோட்டமாக படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் ஊர் தலைவர்களான பிரபு, இளவரசு உடல் அடக்கம் செய்யும் இடத்தில் இரண்டு சமூக பிரிவினருக்குமிடையே ஊர் எல்லையில் யாருக்கு சிலை என்ற வாக்கு வாதம் ஏற்பட இறுதியில் மோதலை கபடி களத்தில் ஏற்பாடு செய்ய திட்டமிடுகின்றனர். பின் கபடி களத்தில் அதிரடியாய் தொடங்கும் போட்டி சூடு பிடிக்க இறுதியில் என்ன நடந்தது என்பதுடன் அந்த காட்சி முடிவடைகின்றது. விறுவிறுப்பான இந்த காட்சி தற்போது ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.