பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த மாதம் 14-ம் தேதி தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்செய்தி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் பற்றி மும்பை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் காதலி ரியா சக்கரவர்த்தி, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உட்பட பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், சுஷாந்துடன் நடித்தவர்கள் என பலரையும் விசாரணை செய்து வருகின்றனர். சுஷாந்த் சிங் மறைந்து ஒரு மாதம் காலம் ஆனாலும், இதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

சுஷாந்த் சிங் மறைவால் பாலிவுட்டில் நெபோடிசம் குறித்த விவாதம் பெரிதளவில் வெடித்தது. திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், வளர்ந்து வரும் மற்ற நடிகர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். வாரிசு நடிகர், நடிகைகளை கடுமையாக விளாசினர். அவர்களை டேக் செய்து மீம்ஸ் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர். இதனால் பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இருந்து விலகினர். இந்த விஷயம் பாலிவுட்டை திக்குமுக்காட செய்தது.

இந்நிலையில், நெபோட்டிசம் பற்றியும் வாரிசு நடிகர் நடிகைகளின் நிலை பற்றியும் இயக்குனர் ஆர்.பால்கி பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசுகையில், இது முட்டாள்தனமான வாதம். இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. உலகளவில் உயர்ந்த மகேந்திராக்கள், அம்பானிகள், பஜாஜ்கள் பற்றி யோசியுங்கள். அவர்கள் தந்தை தொடங்கிய தொழிலை தான் மகன்கள் தொடர்கிறார்கள்.

ஏன் ஒரு டிரைவர், காய்கறி விற்பவர் கூட தங்களுக்கு அடுத்து தங்கள் தொழிலை தங்கள் வாரிசுகளிடம் கொடுக்கிறார்கள். சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இது இருக்கிறது. இந்நிலையில் சினிமாவில் மட்டும் தான் நெபோடிசம் உள்ளது என்று கூறுவது முட்டாள்தனமான வாதம். நாம், சுதந்திரமான சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வளவு பேசும் நாம்... ஆலியா பட், ரன்பீர் கபூரை விட சிறந்த நடிகர், நடிகையை கண்டுபிடியுங்க பார்க்கலாம் என்று கேட்போம். வாதிடுவோம். இதுபோன்ற சிறந்த நடிகர்களை அப்படி சொல்வது நியாயமற்றது. சினிமா வாரிசுகள் இல்லாமல் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், திறமையானவர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கிறது. திறமையில்லாதவர்களை ரசிகர்கள் பார்க்க விரும்புவதில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

சில நேரங்களில் வாரிசு நடிகர், நடிகைகளை ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால், முதல் படத்தில் மட்டுமே. அவர் தங்கள் திறமையால்தான் மட்டுமே வளர முடியும். இவ்வாறு கூறியுள்ளார். இயக்குனர் பால்கி இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலர் இதை ஒப்புக்கொண்டாலும், ஒரு சிலர் இதை விமர்சனம் செய்து தான் வருகின்றனர்.

கடந்த 2007-ம் ஆண்டு அமிதாப்பச்சன் நடித்து வெளியான சீனி கம் படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் பால்கி. அதன் பிறகு பா, ஷமிதாப், கி அண்ட் கா, பேட்மேன் போன்ற படங்களை இயக்கினார். சிறந்த இயக்குனரான இவர் சீரான எழுத்தாளரும் கூட. கடந்த ஆண்டு வெளியான மிஷன் மங்கள் படத்திற்கு திரைக்கதை எழுதினார். பால்கி தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் திரை விரும்பிகள் மத்தியில் பால்கிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் இயக்கிய ஷமிதாப் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. தனுஷ், அமிதாப் மற்றும் அக்ஷரா ஹாசன் இந்த படத்தில் நடித்திருப்பார்கள்.