ஜவான் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் அடுத்த புதிய திரைப்படமாக வெளிவர இருக்கும் டன்கி திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியானது. ராஜ்குமார் இராணி, அபிஷேக் ஜோஷி, கனிகா டில்லான் ஆகியோர் இணைந்து எழுத பக்கா காமெடி டிராமா திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த டன்கி திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து டாப்ஸி கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் விக்கி கௌஷல், போமன் இராணி, தர்மேந்திரா, தியா மிர்சா, சதீஷ் ஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். முரளிதரன் மனுஷ் நந்தன் அமித் ராய் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த டங்கி திரைப்படத்திற்கு இயக்குனர் ராஜ்குமார் இராணி படத்தொகுப்பம் செய்திருக்கிறார். ப்ரீத்தம் பாடல்களுக்கு இசையமைக்க அமன் பின்னணி இசை சேர்த்து இருக்கிறார். அந்த அசத்தலான ட்ரெய்லர் இதோ...
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ராஜ்குமார் இராணி இயக்கத்தில் முதல் முறையாக நடிகர் ஷாரூக் கான் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் டன்கி. ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் கொண்டாடிய திரைப்படங்களில் ஒன்றான முன்னா பாய் எம்பிபிஎஸ் திரைப்படங்களை இயக்கியவர் ராஜ்குமார் இராணி. இந்த முன்னா பாய் எம்பிபிஎஸ் திரைப்படம் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெலுங்கில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்த சங்கரதாதா எம்பிபிஎஸ் என ரீமேக் செய்யப்பட்டு அதிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அமீர் கான் கதாநாயகனாக நடித்த ராஜ்குமார் இராணியின் 3 இடியட்ஸ் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த திரைப்படமும் தமிழில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் இராணி இயக்கத்தில் வெளிவந்த PK மற்றும் சஞ்சு ஆகிய திரைப்படங்களும் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி படங்களாக கொண்டாடப்பட்டன.
இந்த வரிசையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்குமார் இராணி இயக்கத்தில் இந்த டன்கி திரைப்படம் வெளிவர இருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் அட்லி தனது முதல் பாலிவுட் திரைப்படமாக உருவாக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக் கான் நடித்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த ஜவான் திரைப்படம் 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. முன்னதாக இந்த 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் மெகா ஹிட் ஆக 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த நிலையில், அதைத் தொடர்ந்து வந்த ஜவான் படமும் அதைவிட அதிக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஒரே ஆண்டில் இரண்டு 1000 கோடி பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த ஷாருக் கானுக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் வகையில் இந்த டன்கி திரைப்படம் வருகிற டிசம்பர் 21ஆம் தேதி வெளிவர இருக்கிறது.