சன் டிவியில் வானத்தை போல, செம்பருத்தி உள்ளிட்ட பல சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் மணலியை சேர்ந்த ஜெனிபர், காவல் ஆணையர் அலுவலகத்தில் பரப்பரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெனிபர், முதல் கணவர் சரவணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும்,சீரியலில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்த நவீன் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
நவீன் குமாருக்கு வேலை பறிபோனதால் செலவுக்காக தன்னிடம் இருந்து 2.5 லட்சம் ரூபாய் வரை பணத்தை கடனாக பெற்று கொண்டு, மீண்டும் 5 லட்ச ரூபாய் கடனாக வேண்டும் என கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தன்னை அடித்து காரில் ஏற்றி கொண்டு அரை நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்து சென்னை முழுவதும் சுற்றி துன்புறுத்தினார்.
மேலும் 5 லட்ச ரூபாய் கடனாக தரவில்லை யென்றால் அரை நிர்வாண வீடியோவை சமூக வலை தளங்களில் பதிவிட்டு விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறினார். இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி தனது தந்தை, தங்கையுடன் காரில் சென்ற போது நவீன் குமார், அவரது தந்தை உதயகுமார், தம்பி பிரவீன் குமார் ஆகியோர் இணைந்து காரை வழி மறித்து தனது தந்தையை சரமாரியாக தாக்கிவிட்டு, தங்கையின் உடையை கிழித்து மானபங்கபடுத்தினர்.
இது தொடர்பாக மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்த போது நவீன் குமார் தந்தை உதயகுமார் காவல்துறையில் அமைச்சு பணியாளராக பணிப்புரிவதால் காவல் ஆய்வாளர் சிட்டிபாபு தன்மீது விபச்சார வழக்கு போடுவதாக மிரட்டினார்.
பின்னர் தாக்கிய வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருந்ததால் ஆய்வாளர் சிட்டிபாபு உதயகுமாரை தவிர்த்து எளிதில் வெளிவரக்கூடிய வழக்குகளை பதிவு செய்து நவீன் குமார், பிரவீன் குமார்,கார்த்திக் ஆகியோரை ஜெயிலுக்கு அனுப்பி தற்போது பெயிலில் வெளிவந்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் வழக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென்று தொடர்ந்து உதயகுமார், ஆய்வாளர் சிட்டிபாபு ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது தங்கையை மானபங்கபடுத்திய உரிய வீடியோ ஆதாரங்களை வழங்கியும் ஆய்வாளர் சிட்டிபாபு பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக ஜெனிபர் கூறினார்.