பிளஸ் 2 மாணவிகள் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளா மாநிலம் மூணாறு அடுத்த தேவிகுளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூணாறு சுற்றியுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் வசதியற்ற 100 க்கணக்கான சிறுவர் சிறுமியர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிளஸ் 2 வகுப்பு படிக்கும், 4 மாணவிகள் தள்ளாடிய நிலையில் வகுப்பறைக்குள் வந்துள்ளனர். இது தொடர்பாக ஆசிரியர், என்ன என்று கேள்வி கேட்டபோது, 4 பேரும் சேர்ந்து போதையில் உளறி உள்ளனர். இதனையடுத்து, தலைமை ஆசிரியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குழந்தை நலப் பாதுகாப்பு மையத்திற்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விரைந்து வந்த குழந்தை நலப் பாதுகாப்பு அதிகாரிகள், மாணவிகளிடம் விசாரித்துள்ளனர். ஆனால், மாணவிகள் போதையிலிருந்ததால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மகளிர் போலீசாரும் வருகை தந்தனர்.
பின்னர், மாணவிகள் 4 பேரையும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். 4 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவிகள் 4 பேரும் மது அருந்தியிருப்பதை உறுதி செய்தனர்.
இதனிடையே, 4 மாணவிகளுக்கும் போதை தெளிந்த நிலையில், அவர்களிடம் குழந்தை நலப் பாதுகாப்பு அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தினர். அப்போது, மூணாறில் ஆட்டோ ஓட்டும் 20 வயதான செல்வா என்பவர், தங்களுக்கு வெள்ளை நிறத்தில் உள்ள மதுவை வாங்கி பாட்டிலில் கலந்து கொடுத்ததாகவும், அதைக் குடித்த பிறகு தான், தங்களுக்குப் போதை வந்ததாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, மாணவிகளுக்குச் சரியான ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கி, போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவிகளுக்கு மது வாங்கிக்கொடுத்த செல்வாவை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, மாணவிகள் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்தது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.